இணையத்தளத்தில் விற்பனை செய்வதாகக் கூறி 11 மில்லியன் ரூபா மோசடி !

jeev
jeev

இணையத்தளத்தினூடாக அப்பிள் ரக தொலைபேசி மற்றும் கணினிகளை விற்பனை செய்வதாகக் கூறி 11 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

முகத்துவாரம் மற்றும் மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த குறித்த சந்தேக நபர்கள் , கொள்ளுப்பிட்டி , காலி வீதி இலக்கம் 662 என்ற முகவரியில் ‘இன்ஸ்டா பை’ என்ற நிறுவனத்தினூடாகவே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இணையவழியூடாக பணத்தை செலுத்தி 15 நாட்களுக்குள் அப்பிள் ரக தொலைபேசி மற்றும் நவீன கணினி என்பவற்றை கொள்வனவு செய்ய முடியும் என்று தெரிவித்து குறித்த சந்தேக நபர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு இணையவழியூடாகவும் , நேரடியாகவும் இவர்கள் பலரிடம் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு அப்பிள் நிறுவனத்துடனோ அல்லது அதன் பிரதிநிதிகளுடனோ இவர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பலரிடமிருந்து இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ள போதிலும் , அதற்குரிய பொருட்கள் இவர்களால் உரிய நபர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மோசடி தொடர்பில் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கமைய 11 மில்லியன் ரூபா இவர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் 70 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் , சிறையிலடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களால் நடத்திச் செல்லப்பட்ட ‘இன்ஸ்டா பை’ என்ற இணைய தளத்தினூடாக தொலைபேசி அல்லது நவீன கணணியை கொள்வனவு செய்வதற்கு பணத்தை செலுத்தியவர்கள் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடளிக்க முடியும். கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.