எதிர்க்கட்சியினரின் போராட்டம் தொடர்பில் விசாரணை; காவல்துறையினருக்கு நீதிமன்றம் பணிப்பு

Pinai
Pinai

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கடுவலை நீதிவான் நீதிமன்றத்தால் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின்படி அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த முடியாது என்று காவல்துறையினர் அறிவித்திருந்த நிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்று தலங்கம காவல்துறையினர் கடுவலை நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளனர்.

இதன்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றவில்லை என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள நீதிமன்றம் குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருக்கும் முழுமையான வீடியோக்களைப் பெற்றுக்கொண்டு, அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதிமன்றம் காவல்துறையினருக்கு அறிவித்துள்ளது.