அனைத்து வெசாக் விழாக்களும் இரத்து

vesak 850x460 acf cropped
vesak 850x460 acf cropped

இலங்கையில் நிலவும் கொரோனா நெருக்கடி காரணமாக தேசிய வெசாக் விழாக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று பௌத்த விவகார ஆணையகத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனந்த காரியபெரும தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வெசாக் விழா குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமை காரணமாக, நயினாதீவு நாகதீப புராண விகாரையில் நடைபெறவிருந்த தேசிய வெசாக் விழா இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பிலுள்ள ஹுனுபிட்டி கங்காராமய விகாரையில் நடைபெறவிருந்த வெசாக் விழாவும் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 3 வெசாக் நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன. இறுதி முத்திரை மே 24 ஆம் திகதியன்று வெளியிட எதிர்பார்த்திருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலையில் அதை வெளியிடுவது தொடர்பில் முடிவெடுக்கவில்லை” – என்றார்.