உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கோட்டாவிடம் சென்றது அறிக்கை !

1 gf
1 gf

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தயாரித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பேராயர் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோரிடம் பொலிஸார் விசாரணை நடத்தவுள்ள நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு இந்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த செப்டம்பர் 22ம் திகதி விசாரணை நடத்த ஆணைக்குழு ஒன்றை அமைத்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வாவின் தலைமைத்துவத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த விசாரணைக் குழுவில் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜகருணா, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.ஆர். அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணைக்குழு முக்கியஸ்தர்கள் பலரிடமும் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட அதேவேளை, மிகவும் இரகசியமான முறையில் இந்த அறிக்கை தயாரிப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே இடைக்கால அறிக்கை நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியது.

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பிலான வழக்கு விசாரணையில் முன்னிலையாகிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் இதனைத் தெரியப்படுத்தினார்.