தென்மராட்சியில் பயணத்தடையினால் கள் இறக்கும் தொழிலாளர்கள் பாதிப்பு !

Screenshot 20210529 090141 Google
Screenshot 20210529 090141 Google

இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா  தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு தழுவியதாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும் சமூக முடக்கல் கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வருமான இழப்பையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சீவல் தொழிலாளர்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.


யாழ் மாவட்டத்தில்  தென்மராட்சி பிரதேசத்தில் சீவல் தொழிலை நம்பி வாழ்ந்து வருவோர் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போதைய பயணக் கட்டுப்பாட்டின் மூலம் சீவல் தொழில் மூலம் தினமும் பெற்றுக் கொள்ளும் கள்ளினை விற்பனை செய்யவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் நாளாந்தம் காலையிலும் மாலையிலும் மரத்தில் ஏறி பெறப்படுகின்ற கள்ளை வீணாக நிலத்தில் ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அதை வேறு மாற்று உற்பத்தியும் எம்மால் மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. நாளாந்தம் காலையும் மாலையும் சீவப்படும் கள்ளினை என்ன செய்வது என்றறியாதுள்ளது.


மீண்டும் மீண்டும் தொடர்ந்து அத் தொழிலை செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. அப்படி தொடர்ச்சியாக செய்யாவிடில் மீண்டும் அத்தொழிலை செய்யமுடியாத நிலை ஏற்படும். அத்தோடு தொடர்ந்து சீவல் செய்யாவிடில் அந்தமரம் முற்றாக அழிவடையும் நிலையும் வரும். அதன் காரணமாக காலையும் மாலையும் அதனுாடாகப் பெறப்படுகின்ற கள்ளினை கீழே ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு நாளாந்தம் பெறப்படுகின்ற கள்ளினை எமது சங்கத்தின் உடாக விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தின் மூலம் பெறுகின்ற வருமானத்தைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்ததாகவும் தற்போது அதற்கு ஒரு வழியும் இல்லாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது குடும்பத்தின் நிலையை கருதி தமக்கு ஏதேனும் ஒரு நிவாரணத்தை பெற்று தரவேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.