யாழில் அதிகரித்துவரும் திருட்டைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் வீதிகளில் சுற்றுக் காவல்!

20210602 190112
20210602 190112

யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் யாழ்.காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் வீதிகளில் காவற்துறையினரின் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ். குடாநாட்டில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காவற்துறையினரும் பாதுகாப்புத் தரப்பினரும் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். காவல் நிலைய மோட்டார் சைக்கிள் அணியினர் மாலை வேளைகளில் வீதிகளில் சந்தேகத்துக்கிடமாகப்  பயணிப்பவர்களைச் சோதனையிடுவதுடன், பயணிக்கும் வாகனங்களையும் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.

மேலும், அத்தியாவசிய சேவை தவிர்ந்து தேவையற்ற விதத்தில் வீதியில் பயணித்தவர்கள் வீடுகளுக்குத் திருப்பியனுப்பும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.

அண்மைய நாட்களில் யாழ். குடாநாட்டில் மூடப்பட்டிருந்த கடைகள், பாடசாலைகள், தேவாலயங்களை உடைத்து திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.