யாழ்.மாநகர சபை அமர்வில் ‘நாய்’ என விளித்த உறுப்பினருக்கு ஒரு மாத தடை!

Jaffna Municipal Council Meeting 2020 TNA Members walk out. 3
Jaffna Municipal Council Meeting 2020 TNA Members walk out. 3

யாழ்.மாநகர சபை அமர்வில் “நாய்” எனும் சொல்லை பிரயோகித்தமைக்க்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரியாலை வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்த் சபை அமர்வில் கலந்து கொள்ள ஒரு மாத காலத்திற்கு முதல்வர் தடை விதித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போது மாநகர சபையில் இருந்து ஆவணம் ஒன்று திருடப்பட்டு சபை உறுப்பினர் ரஜீவ்காந்தின் உத்தியோகபூர்வ முகநூலில் பதிவேற்றப்பட்டு இருந்தது.

குறித்த கடிதம் எவ்வாறு உறுப்பினர் கைக்கு கிடைத்தது என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வரினால் உறுப்பினருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் விவாதம் எழுந்தது. அதன் போது சக உறுப்பினரான பார்த்தீபனுடன் வாக்கு வாதம் எழுந்திருந்தது.

அதன் போது உறுப்பினர் ரஜீவ்காந்த் , சக உறுப்பினரான வ.பார்தீபனை நோக்கி “நாய்” என விளித்து பேசியிருந்தார்.

அதனால் முதல்வர் சபையில் அநாகரிகமான முறையில் சொற்பிரயோகங்களை பாவித்தமைக்காக சபையில் மன்னிப்பு கோரி , குறித்த சொற்பிரயோகங்களை மீள பெறுமாறு இரு உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

அதனை அடுத்து உறுப்பினர் வ. பார்த்தீபன் மன்னிப்பு கோரி , தவறான, அநாகரிகமான சொற்பிரயோகங்களை பாவித்திருந்தால் அவற்றை மீள பெறுகிறேன் என சபையில் தெரிவித்தார்.

ஆனாலும் அவருடன் வாக்குவாதப்பட்டு ” நாய்” என விளித்த உறுப்பினர் ரஜீவ்காந்த் தான் சபையில் மன்னிப்பு கோர மாட்டேன் எனவும் , அநாகரிகமான சொற்களை மீள பெற மாட்டேன் எனவும் கூறினார்.

அதனால் அவரை சபை நடவடிக்கையில் இருந்து ஒரு மாத காலத்திற்கு இடைநீக்க முடிவெடுக்கப்பட்டது.

அந்த முடிவுக்கு சபையில் 23 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். அவருடன் வாக்குவாதப்பட்ட சக உறுப்பினரான வ.பார்தீபன் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் நடுநிலைமை வகித்திருந்தனர். தன்னை சபை நடவடிக்கையில் இருந்து நீக்க கூடாது என ரஜீவ்காந்த்தும் மற்றுமொரு உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக ரஜீவ்காந்த் சபை நடவடிக்கையில் ஒரு மாத காலத்திற்கு ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.