விலங்குகளில் கொரோனா வைரஸ் இருப்பதை பற்றி மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை- வைத்தியர் எஸ். சுகிர்தன்

vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920
vikatan 2020 07 4609f62f 42e9 48c0 b14a e2932d20eb62 corona 5174671 1920

விலங்குகளில் கொரோனா வைரஸ் இருப்பதை பற்றி மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் வைத்தியர் எஸ். சுகிர்தனால் இலங்கையில் வௌவால்களுக்கு ‘கொரோனா’ என்பது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதுமாணிக்கல்வியினை மேற்கொள்பவரால் 2017 இல் தொடங்கிய ஆய்வினை மேற்கோள்காட்டி இலங்கையில் வௌவால்களுக்கு கொரோனா’ என்ற செய்தியை ஊடகங்கள் ஒளிபரப்பியிருந்தன.

அந்தச் செய்தியை அறிந்து நாட்டு மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த அச்சத்தின் காரணமாக அவர்கள் வௌவால்களை வீடுகளை விட்டு வெளியேற்ற வேண்டுமா. வௌவால்களை தங்கள் பகுதிகளை விட்டு வெளியேற்ற வேண்டுமா, வௌவால்கள் பழங்களை சாப்பிடுவதால் அப்பழங்களை சாப்பிடுவது பிரச்சினைகளை ஏற்படுத்துமா என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த பிரச்சனையால் இலங்கை மக்கள் பழங்களை சாப்பிடுவதை நிறுத்தினால், இது பழ உற்பத்தியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ஒரு பொறுப்புள்ள தொழிற்சங்கமாக, இந்த விடயம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றோம்.

விலங்குகளில் கொரோனா வைரஸ் இருப்பது கால்நடை வைத்திய விஞ்ஞானத்துக்கு புதியதொன்றல்ல, மேலும் கொரோனா வைரஸின் பல்வேறு விகாரங்கள்(strains) 1930 களில் இருந்து விலங்குகளில் பதிவாகியுள்ளன. இருப்பினும், விலங்குகளில் இருக்கும் கொரோனா வைரஸ் விகாரங்கள் மனிதர்களுக்கு பரவுகின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, விலங்குகளில் கொரோனா வைரஸ் இருப்பதைப் பற்றி மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை என்று எங்கள் சங்கம் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றது. எனவே, இந்த விடயத்தின் காரணமாக அப்பாவி விலங்குகளை துன்புறுத்துவதைத் தவிர்க்குமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம்.

கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், பேராதனை பல்கலைக்கழக விலங்கு மருத்துவ பீடம், மற்றும் பிற அறிவியல் நிறுவனங்கள் தற்போது விலங்குகளில் கொரோனா இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
எனவே வௌவால்களில் பதிவான கொரோனா வைரஸ் திரிபுக்கும் கொவிட் 19 நோயை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ் – 2( Sars Cov-2) வைரஸின் தற்போதைய திரிபுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்று நாங்கள் மேலும் கூறிக்கொள்கின்றோம்.

மேலும் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகளை எங்கள் சங்கம் தெளிவாகப் பாராட்டுகின்றது. எவ்வாறாயினும், அறிக்கைகளை வெளியிடும்போது சமூகத்தில் கவனம் செலுத்துவதோடு. தேவையில்லாமல் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தயவாக கேட்டுக்கொள்கிறோம். இதுபோன்ற பொதுவான உண்மைகளை பெரிதுபடுத்துவதன் மூலம் மக்களுக்கு தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறும் அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களையும் தயவாக கேட்டுக்கொள்கிறோம்.என்றுள்ளது.