“தாய்மை” நிலைய செயற்றிட்டத்தை ஆரம்பிக்கிறது மூளாய் வைத்தியசாலை

IMG 20210626 WA0024
IMG 20210626 WA0024

வடக்கு மாகாணத்தில் குழந்தைப் பேறு இல்லாத தம்பதியருக்கு மருத்துவ மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கான “தாய்மை” கருவளச்சிகிச்சை நிலையத்தை அமைத்துள்ளதாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் விளக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை வைத்தியசாலையில் நடத்தப்பட்டது. அதில் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு;

பொதுவாக மணமுடித்த தம்பதியினரது மிகப்பெரிய கனவாக இருப்பது ஒரு குழந்தை செல்வத்தையாவது பெற்று எடுப்பது என்பதே ஆகும். இருப்பினும் சில தம்பதியினரால் மருத்துவ, ஆரோக்கிய காரணிகளான பெண்களிடையே பொதுவாக நிலவும் சூழிடலில் காணப்படும் குறைபாடு, கருத்தரித்தல், அல்லது தரித்த கருவை குறித்த காலப்பகுதி வரை பேணுதல் மற்றும் ஆண்களிடையே காணப்படும் விந்து உற்பத்தி குறைவு போன்றவற்றால் இச் செல்வத்தை அடையமுடியாது உள்ளது.

மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது பல மருத்துவ காரணிகளினால் தம்பதிகளில் பெண்ணோ அல்லது ஆணோ அல்லது இருவருமோ பாதிப்புக்குள்ளாகின்றனர். போர்க் காலத்தில் நிலவிய அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் போன்றவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக கூட அவர்களின் சிக்கலான நிலமை மோசமடைய காரணமாக அமைந்திருக்கலாம்.

வடமாகாணத்தில் மேற்குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முழுமையான சிகிச்சைகள் மற்றும் கவனிப்பு வசதிகள் காணப்படாத நிலையில், கொழும்பு பகுதியிலுள்ள சில வைத்தியசாலைகளில் அவை காணப்படுகின்றன.

வடபகுதியில் உள்ள சாதராண வருமாமனம் உடைய ஒரு குடும்பத்தவருக்கு தேவையான சிகிச்சை பெறுவதற்கும், கொழும்பில் தங்குவதற்கும் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கும் மொத்தமாக செலவழிக்கும் தொகை அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அநேகமான பாதிக்கப்பட்ட தம்பதியினர் மருத்துவ உதவிக்காக அணுக வெட்கப்படும் நிலை காணப்படுகிறது.


ஆகையால் தங்களுடைய நெருங்கிய சமுகத்தினால் தாங்கள் ஒரு நகைப்புரியவர்கள் என நினைப்பதை தவிர்ப்பதற்காக சிகிச்சை காலத்தில் இரகசியத்தன்மை பேணப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இதற்கு மேலதிகமாக அவர்கள் தங்களுடைய உற்றார் உறவினர்களைவிட்டு சில கிழமைகள் செலவழிக்க நேரிடும். மேற்குறிப்பிட்டவற்றை பிரச்சினைகளிற்கு ஏற்றுக்கொண்டு அதற்கு தீர்வாக, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நன்கு வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் தாய்மை செயற்திட்ட மையத்தை வடிவமைக்க முன்மொழியப்படுகின்றது.

தாய்மை திட்ட நிலையம்

இந்த நிலையம் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் 1ம் மாடியில் நோயாளிகளின் இரகசியதன்மை கருதி அமையவுள்ளது. இத்திட்டத்திற்கான மூலதனம் 24 மில்லியன் ரூபாயாகும். இதில் அடித்தள உட்கட்டமைப்பு 1.4 மில்லியன் ரூபாயும் சத்திரசிகிச்சை கூடத்திற்கான மருத்துவ உபகரணங்கள் 21 மில்லியன் ரூபாயும் சத்திரசிகிச்சையின் பின்னர் தங்கும் அறைக்கு 1.3 மில்லியன் ரூபாயும் அடங்கும். ஒரு வருடத்திற்கு 20 நோயளிகளுக்கு பாவித்து முடிக்கக்கூடிய பொருட்களுக்கானதும் (செயற்பாட்டு செலவீனம்) மற்றும் வளர்ப்பு ஊடகம், ஏனையவற்றுக்கான செலவீனம் 1.5 மில்லியன் ரூபாயாகும்.

மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் தேவையான நிதி ர25.5 மில்லியன் ரூபாயாகும். இந்த நிலையம் குழந்தைப்பேற்றை தம்பதியினருக்கு கருவள சிகிச்சைக்குத் தேவையான மருந்து உட்பட (பெண்ணியல்) மொத்த சிகிச்சைகளுக்கும் உதவும். பல்வேறுபட்ட சிகிச்சைகளில் கீழ்காணும் அண்ணளவான செலவீனம் தனித்தனியாக அடங்கும்.

• வெளியக கருக்கட்டல் – கருவள சிகிச்சைக்கான மருந்துகள், முட்டையானது பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ஆய்வு கூடத்தில் ஆணின் விந்து அணுவைக்கொண்டு கருக்கட்டப்பட்ட கருவளர்க்கப்படும். இறுதியில் சத்திரசிகிச்சை கூடத்தில் கரு பெண்ணின் கருப்பையில் வைக்கப்படும் செயன்முறையும், கருவள சிகிச்சைகான மருத்துகளும், சிக்கலான அதிகரித்த விலை கொண்ட நடைமுறையுடன் ஆகும். செலவீனம் 7 லட்சம் ரூபாயாகும். எடுத்துக்காட்டாக வெளியக கருக்கட்டல் சிகிச்சைக்கு அண்ணளவாக ஏழு கிழமைகள் தேவைப்படும்.


• ஆணிடமிருந்து சேகரிக்கப்பட்டு விந்தணு கழுவப்பட்டு பின்னர் வீரியம்மிக்கதாக்கப்பட்டு அதன் பின்னர் பெண்ணின் கருப்பையில் அவளுடைய முட்டை கருப்பையை அடையும்போது விந்தணு விடப்படும். இதன் செலவு 75 ஆயிரம் ரூபாயாகும்.

• உள்ளக குழியவுரு விந்து உட்புகுத்தல் – இந்த செயற்பாடானது ஆய்வுகூடத்தில் ஆணிடம் இருந்து தேர்வுசெய்யப்ட்ட விந்தணு பெண்ணின் முட்டையின் மையத்தில் உட்புகுத்தப்படும். ஏனெனில் முட்டையின் வெளிக்கவசம் மிகவும் தடிப்பானது அல்லது வன்மையானதால் விந்தணு ஊடுருவி செல்ல முடியாது. இது ஒரு வெளியக கருக்கட்டலுக்கு ஆதரவு அளிக்கும் மேலதிக செயன்முறை ஆகும். செலவீனம் 70 ஆயிரம் ரூபாயாகும்.

மருத்துவர் ஜே.ஜெயந்திரன் அமெரிக்காவில் தொழில்சார் திறமையுடைய நிபுணர். அங்கு ஆய்வுகூட மற்றும் தொழில்நுட்ப ஆதரவு (Andrology) பல பெண்ணிய நோய் மருத்துவ நிபுணர்களிற்கு வழங்கி வருகின்றார். இவர் தாய்மை நிலையத்தை அமைக்க தனது தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை செய்ய முன்வந்துள்ளார். இவர் தொடர்ச்சியாக தனது வழிகாட்டல்களை இந்நிலையத்திற்கு வழங்குவார். மருத்துவர் ஜே. ஜெயந்திரன் பற்றியும் அவரது சேவைகளையும் மேலதிகமாக அறிய கீழ்க்காணும் இணையத்தள முகவரிக்கு செல்லவும்.
WWW.androlab.com

எவ்வாறாயினும் சாதாரண வருமானம் உடைய தம்பதியினர் ஒருவர் ஐவிஎப் (IVF) சிகிச்சைக்குரிய செலவை சமாளித்து முகம் கொடுக்க முடியாத நிலையால், வட பகுதியில் பலர் குழந்தைகளற்ற தம்பதிகளாக காணப்படுகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு “தாய்மை” நிலையம் நிதிமூலம் ஒன்றை உருவாக்கி இந்த நிதியிலிருந்து ஒரு வருடத்திற்கு 10 தம்பதியினருக்கு கடன் வழங்கும் செயற்பாட்டை நிர்வகித்து நடைமுறைப்படுத்தவுள்ளது.

அதே வேளை ஒரு குறைந்த வருமானம் உள்ள தம்பதியினருள் ஆண்களிற்கான ஐயூஐ (IUI) சிகிச்சைக்கான நடைமுறைக்கேனும் பணம் செலுத்த முடியாது உள்ளனர். ஆகவே மிகவும் குறைந்த சந்தர்ப்பங்களில் வருடமொன்றுக்கு 5 குழந்தைப்பேறு அற்ற தம்பதியினருக்கு இந்த நடைமுறைகளுக்கூடாக இலவசமாக சிகிச்சை வழங்கும்.


இதற்காக தேவைப்படும் நிதி 10 கடன் வசதி மற்றும் 05 இலவச சிகிச்சைக்கானது 7.35 மில்லியன் ரூபாயாகும். இதனையும் முன்னர் காட்டப்பட்ட தேவையான நிதிமூலமான 25.5 மில்லியன் ரூபாயையும் இணைக்கும் போது 32.85 மில்லியன் ரூபாய் தேவைப்படும்.

நிதிக்கான கோரிக்கை :-
இந் நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழும் தனித்தனியான நலன்விரும்பிகளிடமும் இலங்கையை தளமாகக் கொண்டு வாழ்கின்றவர்களிடமும் அதேபோன்று வெளிநாடுகளில் கருணையுடன் இயங்கும் தரும நிறுவனங்கள், ஏனைய நிறுவனங்கள் என்பனவற்றிடமும் இச் செயற்பாட்டை செய்ய மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை நிதியுதவி வேண்டி நிற்கிறது.


“தாய்மை” கருவளச்சிகிச்சை
எமது பகுதியில் சனத்தொகை வீதம் குறைவடைந்து செல்கின்றது. திருமணமாகி நீண்ட காலமாக குழந்தைச் செல்வம் கிடைக்காத பல தம்பதிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். உரிய சிகிச்சை வசதிகள் காணப்படாமையும், இதைப்பற்றி விளக்கம் இல்லாமையும் கூட முக்கிய காரணங்களாக அமையலாம்.


இதனை கருத்திற்கொண்டு “தாய்மை” கருவளச்சிகிச்சை நிலையத்தை நிறுவி செயற்படுத்தி வருகின்றோம். இது ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில் இந் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுவது காலத்தின் தேவையாகும். பல தம்பதிகள் இங்கு சிகிச்சைபெற வருகின்றனர். இங்கு இதுவரை சிகிச்சை பெற்றவர்களில் பலருக்கு குழந்தைப் பாக்கியம் கிடைத்துள்ளமையானது மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாகும்.


சிகிச்சை பல படிமுறைகளைக் கொண்டது. சிலவற்றை நாம் ஏற்கனவே செய்துகொண்டு வருகின்றோம். பலவற்றை செய்யவேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும்போது நிறைவான சேவையை வழங்கி எமது இலக்கை அடைந்து எமது பகுதியில் பிறப்பு வீதத்தையும் அதிகரிக்க முடியும்.


எம்மிடம் சிகிச்சை பெற பின்வரும் மூன்று வகையினர் வருகின்றனர்

  1. பணவசதியுள்ளவர்கள்.
  2. முழுமையாக பண வசதியில்லாதவர்கள்.
  3. எவ்வித வசதியும் இல்லாதவர்கள்.
    இவர்களுக்காக நாம் கடன்வசதிமூலம் சிகிச்சை அளிக்கவும், முற்றுமுழுதாக இலவசமாக சிகிச்சையளிக்கவும் திட்டங்கள் தீட்டியுள்ளோம்.
  4. இந்த நிலையம் கூட்டுறவு வைத்தியசாலை மூளாயின் கட்டமைப்பின் கீழ் கீழ்க்காணும் ஓர் ஏழு பேர் கொண்ட பாதுகாவலர் மூலம் நிர்வகிக்கப்படும். இப்பாதுகாவலர் குழாமில் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் பதவி வழி தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர், மருத்துவ அத்தியட்சகர், மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்படும் பெண்ணோயியல் மருத்துவ வல்லுநர், கலாநிதி ஆறுதிருமுருன், சமூக ஆர்வலர் ஆகியோர் அடங்குவர்.
    இவர்களுடன் சர்வதேசிய ரீதியில் ஆலோசகர்களாக கீழ்வருவோர் செயற்பாடுவர் :
  5. மருத்துவர் பூலோகநாதன் -லண்டன்
  6. மருத்துவர் இராஜசுந்தரம் -லண்டன்
  7. மருத்துவர் சிறீதரன் -லண்டன்
  8. மருத்துவர் தேவநாதன் -லண்டன்
  9. மருத்துவர் ஜெயந்திரன் – அமெரிக்கா
  10. மருத்துவர் நித்தியானந்தன் -லண்டன்
  11. பரமநாதன் -லண்டன்
  12. ஞானநந்தன் -லண்டன்
  13. ஹரிசந்திரன் அமெரிக்கா
    இந்த திட்டத்தினைப்பற்றி கூட்டுறவு தினைக்களத்திற்கும் காலத்திற்குக் காலம் தெரியப்படுத்துவதுடன் அவர்கள் மூலம் கணக்குகள் யாவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
    இத்திட்டத்தினை முழுமையாக நிறைவடையைச் செய்ய 25 மில்லியன் ரூபாய் தேவையேன மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக நன்கொடையாளர்கள் பலர் உதவ முன்வந்திருப்பதையும் குறிப்பிட விரும்புவதுடன் மேலும் பலரை நிதியுதவி மூலம் இணைத்துக் கொள்ள விருப்புகின்றோம். அதன்மூலமே எமது நோக்கு வெற்றியடையும்.
    இச்செயற்பாட்டை எமது ஒரு சமுதாயக் கடமையாக ஏற்று நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோமாக.
    ‘ஓன்றுபட்டால் உண்டு வாழ்வு’