திப்பிலி பகுதியில் காடழிப்பு! பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உடந்தையா?

thimpili 7
thimpili 7

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திப்பிலி குளத்தின் அலைகரையை அண்டிய பகுதியில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் உடந்தையாக செயற்படுவதாக சமூக ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

குறித்த பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக தெரிவித்து சுமார் 20 நாட்களாகியும் குறித்த காணிகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து படிவம் கூட ஒட்டப்படவில்லை குறித்த இடத்தில் காணி அபகரித்தவர்களுள் பிரதேச செயலக ஊழியர்களும் அடங்குவதனால் காணிப்பகுதியினர் அவர்களுக்கு உடந்தையாக செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது

இது குறித்து மேலும் தெரியவருகையில்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள திம்பிலி குளத்தின் எல்லைக்கு உட்பட்ட மற்றும் பிரதேச செயலக எல்லைக்குட்ப்பட்ட வனவள திணைக்கள எல்லைக்குட்ப்பட்ட சுமார் 30 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

நாட்டில் பயணத்தடை அமுலில் உள்ள வேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள கல்வியலாளர்கள், வைத்தியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், புதுக்குடியிருப்பு நகரப்பகுதியின் பிரபல வர்த்தகர்கள் உள்ளிட்டவர்களால் மிகவும் சூட்சுமமான முறையில் குறித்த காடழித்து காணி பிடிக்கும் செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

திம்பிலி குளம் புனரமைக்கப்படாத நிலையில் புனரமைப்பதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன புதுக்குடியிருப்பு கமநல சேவை நிலையத்தின் கீழ் இந்த குளம் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் குளத்தினை நம்பி சுமார் 25 ஏக்கர் நெற்செய்கை மேற்கள்ளப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

குளத்தின் ஒருகரை காட்டுப்பகுதியாக காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதி காடுகள் அழிக்கப்பட்டு குளத்துக்கு நீர்வரும் ஆறுகள் மூடப்பட்டு காணி அபகரிப்பு இடம்பெற்றுள்ளதோடு குளத்தின் அலை கரையில் அதிகளவிலான சட்டவிரோத மணல் அகழ்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குளத்தின் அலை கரை பகுதியில் அதிகளவான இடங்களில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் திம்பிலி குளத்தின் கமக்கார அமைப்புக்களோ ஏனைய மக்களோ வெளியில் செல்லமுடியாத நிலையில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலத்தில் குளத்திற்கு சொந்தமான காணியில் காடுகள் அழிக்கப்பட்டு காணி பிடிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன் பிரதேச செயலாளருக்கும் கமக்கார அமைப்பினர் முறையிட்டுள்ளார்கள் இருப்பினும் குறித்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்கு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த பகுதிக்கு கனரக இயந்திரம் கொண்டு செல்வதற்கான அனுமதி எதுவும் பெறாத நிலையில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த வசதி படைத்தவர்கள்,அரச உத்தியோகத்தர்களே இந்த காணிபிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு தமது அலுவலக ஊழியர்கள் செல்வந்தர்கள் காணி அபகரிப்பு செய்ததன் காரணத்தினால் நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த பகுதியில் அமைந்துள்ள வெறும் காணிகளை காணி இல்லாத கர்ணன் குடியிருப்பு மக்களுக்கு தலா அரை ஏக்கர் வீதம் விவசாய பயன்பாட்டிற்காக பகிர்ந்தளிப்பதற்கு புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்திக்குழுவிற்கு எடுத்து செல்லப்பட்டும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்த காணிகள் வசதி படைத்தவர்க்களால் பல ஏக்கர் காணி உள்ளவர்களால் இந்த காணி அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு 20-06-2021 அன்று ஊடகவியலாளர்கள் சென்று நிலைமைகளை பார்வையிட்டு உரிய தரப்புக்களை தொடர்புகொண்டு வினவிய நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்கள் கடந்த ஒரு மாதகாலமாக அரச காணி அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறித்து கிராம சேவையாளர் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்தார் காவல்துறையினர்,வனவளத் திணைக்களத்திற்கும் தெரியப்படுத்தினார். இது ஒரு சட்டவிரோதமான செயற்பாடு அரச காணியினை சுத்தம் செய்வதற்கு கனரக இயந்திரங்கள் பாவித்துள்ளதாக கிராம அலுவலகர் முறைப்பாடு செய்துள்ளார் இதில் உள்ள யாரும் காணி பெற தகுதி உடையவர்களும் அல்ல என தெரிவித்தார். அத்தோடு இதுகுறித்து காவல்துறையினரிடமும் வனவள திணைக்களத்திடமும் முறையிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சடடத்துக்கு முரணாக காணி அபகரிக்கும் போது பிரதேச செயலகம் நடவடிக்கை எடுக்ககூடிய நிலையிலும் ஏனைய திணைக்களங்களுக்கு அறிவித்ததாக சொல்லப்படுவது பொருத்தமானதாக இல்லாத போதும் காவல்துறையினர் தமக்கான எந்த முறைப்பாடும் செய்யவில்லை என தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கமநல சேவை நிலையம் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் வனவள திணைக்களம் ஆகியோருக்கு சொந்தமான காணிகள் காடுகள் இடிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளது சில காணிகளுக்கு வேலிகள் அமைக்கப்பட்டு தென்னை மரங்கள் நாட்டப்பட்டு கிணறு வெட்டப்பட்டு துரித அபிவிருத்தி இடம்பெறுகிறது குறித்த காணி உரிமையாளர்கள் இவற்றை தடுக்கவில்லை என்பது அங்கு காணி அபகரித்தவர்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செல்வந்தர்களும் என்பதால முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழை மக்கள் காணி அற்றவர்கள் அரை ஏக்கர் காணி வெட்ட அனுமதிக்காதவர்கள் இவற்றை வேடிக்கை பார்ப்பது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இடத்துக்கு ஊடகவியலாளர்கள் சென்று நிலைமைகளை கலந்துரையாடியதன் பின்னணியில் உடனடியாக புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் கிராம அலுவலரால் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் இயற்க்கை வள சுரண்டல்கள் அழிப்புக்களுக்கு இவ்வாறு ஒவ்வொரு திணைக்களங்களும் மற்ற திணைக்களன்களை சாட்டிவிட்டு செல்கின்ற நிலையில் வசதி படைத்த செல்வந்தர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை செய்துவருகின்றதாக மக்கள் குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் 22-06-2021 அன்று குறித்த இடத்தில் காடழிப்பில் ஈடுபட்ட நபர்களை விசாரணைக்கு அழைத்த புதுக்குடியிருப்பு காவல்துறையினர் குறித்த இடத்தில் காணி அபகரித்த நபர்களாக முறைப்பாடு செய்யப்பட்ட எட்டு பேரை கைது செய்தனர்

குறித்த நபர்களில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வைத்தியர் ஒருவர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக சமூக சேவைகள் கிளை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாக சபை முக்கியஸ்தர் உள்ளிட்ட ஆசிரியர்கள் இருவர் புதுக்குடியிருப்பு நகரின் பிரபல வர்த்தகர்கள் இருவர் சமுர்த்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடங்கிய எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டு அன்றைய தினமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களைசொந்த பிணையில் மன்று விடுதலை செய்ததோடு .குறித்த வழக்கு எதிர்வரும் 02.11.21 அன்று விசாரணைக்கு திகதியிடப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறிருக்க நீதிமன்று வரை விவகாரம் சென்ற போதும் குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலகத்தினை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தும் குறித்த இடிக்கப்பட்ட காடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு காணிகளில் வேலி அடைத்து கிணறுவெட்டி மரங்கள் நடுவதும் தொடர்ந்து இடம்பெறுகிறது இவ்வாறு நடக்க தொடர்ந்து பிரதேச செயலகம் ஏன் அனுமதி காக்கிறது இந்த விவகாரங்களுக்கு எடுக்க வேண்டிய முதலாவது செயற்பாட்டை கூட இன்னும் தொடங்கவில்லை இதன் மூலம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் உடந்தையாக செயற்படுவதாக சமூக ஆர்வலர்களால் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படுகிறது.

மேலும் குறித்த காணி அபகரிப்பு செய்தவக்களுக்காக சில அரசியல் தலைவர்களும் அரச திணைக்களங்களுடன் கலந்துரையாடி குறித்த விடயத்தை சமாளிக்க முற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.