மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வாசன் ரட்ணசிங்கம்
வாசன் ரட்ணசிங்கம்

“இந்தியாவில் புதிய வைரஸ் திரிபு கண்டறியப்பட்டு சில மாதங்களின் பின்னரே அங்கு பெரும் அவலநிலை ஏற்பட்டது. அதேபோன்று இலங்கையிலும் புதிய வைரஸ் திரிபுகள் இப்போதுதான் அடையாளம் காணப்படுவதால் இன்னும் சில மாதங்களில் பேரவல நிலைமை ஏற்படக்கூடும்.”

இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகக் குழு உறுப்பினருமான வாசன் ரட்ணசிங்கம் மேலும் தெரிவித்ததாவது

“தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இதனால் இனம் காணப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. ஆனால், தொற்றாளர்கள் வீதம் இலங்கையில் அதிகரித்தே செல்கின்றது. உயிரிழப்பும் அதிகரித்துச் செல்கின்றது. இந்தக் காலகட்டத்தில் புதிய திரிபுகளும் அவதானிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் டெல்டா வைரஸ் அவதானிக்கப்பட்டு 4 மாதங்களின் பின்னரே மோசமான நிலைமை அங்கு ஏற்பட்டது. பெருமளவானோர் உயிரிழந்தனர். இலங்கையிலும் டெல்டா வைரஸ் தற்போதுதான் இனம் காணப்பட்டுள்ளது. சில மாதங்களில் இந்தியாவில் ஏற்பட்டதைப் போன்றதொரு பேரவலநிலை இங்கும் ஏற்படலாம்.

எனவே சுகாதார அமைச்சு, பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கையை இலங்கையில் அதிகரிக்கவேண்டும். இதன் ஊடாகவே தொற்றைக் கட்டுப்படுத்த முடியும்” – என்றார்.