நாயாறில் தென்பகுதி மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் மேலும் 7 பேருக்கு கொரோனா!

IMG 20210702 WA0016 1
IMG 20210702 WA0016 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட நாயாறு பகுதியில் பருவத்தொழிலுக்கு வருகைதரும் மீனவர்கள் இங்கு குடியிருக்க அனுமதி வழங்கப்படாத நிலையிலும் அவர்கள் கடற்கரை பகுதிகளில் வாடிகளை அமைத்து அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்து மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வந்தனர்.

தற்போதைய கொரோனா அபாய சூழலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாற்றுப் பகுதியில் அதிகளவான தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் மிகவும் நெருக்கமாக சுகாதார அறிவித்தல்களை பேண முடியாத நிலையில் எதுவித சுகாதார கட்டுப்பாடுகளும் இன்றி குடியிருந்த நிலையில் இவர்களில் 28 பேருக்கு கடந்த 29 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை கொரோனா மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக சுகாதார பிரிவினர் பேருந்தினை கொண்டு சென்றபோது அவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் முரண்பட்டுள்ளனர் . இந்நிலையில் நாட்டில் உள்ள சட்டத்தினை பயன்படுத்தி சுகாதார பிரிவினரின் கட்டளைக்கு அமைவாக நீண்ட நேரத்தின் பின்னர் 5 பேரையும் கொவிட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.

இதேவேளை குறித்த பகுதியில் அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடு செய்தபோதும் அதற்கும் குறித்த பகுதி மக்கள் ஒத்துழைக்கவில்லை பல்வேறு சிரமங்களின் மத்தியில் 02.07.2021 அன்று 74 பேருக்கு மாத்திரமே பி சி ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க முடிந்ததாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதுதொடர்பில் கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் அவர்கள் குறித்த பகுதியில் பருவகால கடற்தொழிலக்காக சுமார் 700 வரையான சிறுவர்கள் ,பெண்கள்,கர்ப்பிணிகள் என அனைவரும் மிகவும் நெருக்கமாக வசித்து வருகின்றார்கள்.

இவர்கள் தொடர்பான எந்தவித பதிவுகளும் இங்கு இல்லை இவர்களை இனம்காண்பது பி சி ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வது என அனைத்து விடயங்களிலும் பாரிய சவால் உள்ளது இவ்வாறு பதிவுகள் இன்றி வாழ்பவர்களை நாம் இனம்காண முடியாது இது ஒரு பாரிய சுகாதார பிரச்சனை இங்கு கர்ப்பவதிகள் உள்ளார்கள் சிறுவர்கள் உள்ளார்கள் உரிய சுகாதார வசதிகள் இல்லை பதிவுகள் இல்லை இது எமக்கு ஒரு பாரிய சவால் இவ்வாறு எப்படி அனுமதிக்கப்பட்டுள்ளனர் என எமக்கு பாரிய சிக்கல் உள்ளது.

இதனை விட மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் இந்த பகுதியில் இருந்து கடந்த 28 ஆம் திகதி 30 பேர் பேருந்து ஒன்றின் ஊடாக முடக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தில் உள்ள அவர்களின் ஊருக்கு சென்றுள்ளார்கள் அவர்கள் மீண்டும் இந்த இடத்திற்கு வர அனுமதிக்கப்பட கூடாது என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்வதுடன் நாயாற்று பகுதியில் வந்து இருக்கும் மக்கள் தொடர்பில் எந்தவித பதிவுகளும் எவரிடமும் இல்லாத நிலை காணப்படுகின்ற நிலையில் முல்லைத்தீவிற்கு ஆபத்தான நிலையினை ஏற்படுத்தாதவாறு அதிகாரிகள் செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்ததோடு இவ்வாறான பாரதூரமான நிலையில் கொவிட் தடுப்பு செயலணிக்கு குறித்த பகுதியினை மறு அறிவித்தல் வரை முடக்குமாறு தம்மால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.உமாசங்கர் மேலும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மறுநாள் காலை 03.07.2021 முதல் குறித்த பகுதி முடக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் குறித்த பகுதியில் 74 பேரிடம் மேற்கொண்ட பி சி ஆர் பரிசோதனை முடிவுகளில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் குறித்த நபர்களை கிருஸ்ணபுரம் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு சுகாதார தரப்பினர் சென்ற நிலையில் அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒருவர் புத்தளம் சென்றுவிட்டதாக சுகாதார தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனை கேட்டு சுகாதார தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் முடக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதி உள்ளபோது குறித்த நபர் எவ்வாறு வெளியே சென்றுள்ளார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு ஏனைய 6 பேரையும் கிருஸ்ணபுரம் கொரோனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.