கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படா விட்டால் அரசுக்கெதிராக போராட்டம்

kodeeswaran
kodeeswaran

ஜனாதிபதியின் வாக்குறுதிக்கமைய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படா விட்டால் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இணைத்து போராடுவதற்கு தயாரா உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்படுகின்றமையின் காரணமாக கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும். அத்துடன் பொத்துவில் பிரதேசத்தில் கோமதியை மையமாகக்கொண்டு ஒரு பிரதேச செயலகமும், சம்மாந்துறை பிரதேசத்தில் மல்வத்தையை அடிப்படையாக கொண்ட பிரதேச செயலகங்கள் உருவாக்கபட வேண்டிய அவசியம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகிறது.

கடந்த அரசாங்கத்தின் கவனத்திற்கு இது தொடர்பில் கொண்டு சென்ற போதும் இது தொடர்பில் கவனத்தில் எடுக்கவில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடைகளில் தான் ஜனாதிபதியானால் மூன்று நாட்களில் தரமுயர்த்தி கொடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் ஆனால் மாதங்கள் கடந்தும் தரமுயத்தப்படவில்லை .

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடையத்தை பேசும் பொருளாக ,தேசிய பிரச்சினையாக, கொண்டு வந்தவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பதை மறந்துவிட கூடாது. தரமுயர்த்தி தருவோம் என சொல்ல வைத்தவர்கள் நாங்கள். விநாயகமூர்த்தி முரளிதரன் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது செய்யாத விடையத்தை ,சொல்லாத விடயத்தை இன்று கூக்குரல் இட்டு திரிவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்முனை பிரதேச செயலகம் தரம் உயரும் என்ற விடயத்தில் கூடுதலான அழுத்தங்களை கொடுத்து தரம் உயர்த்தும் வரை போராடிக் கொண்டே இருப்போம் அடுத்தகட்டமாக பிரதமர் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து தராவிட்டால் கல்முனையில் வாழும் தமிழ் மக்கள் மட்டுமல்ல அம்பாறையில் வாழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களை ஒன்று திரட்டி போராடுவதற்கு தயாராக இருக்கின்றோம்.