வட – கிழக்கு மாகாணங்களுக்கு விசேட தடுப்பூசி வேலைத்திட்டம்!

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த, 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள், கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களுக்கான, தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இந்த விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய, இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 71, 495 பேருக்கு கொவிட்-19, இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 47, 642 பேருக்கும்,  அம்பாறையில் 14, 146 பேருக்கும், திருகோணமலையில் 9, 725  பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.