சுகாதார ஊழியர்களிற்கு தடுப்பூசி வழங்குவதில் சுகாதாரத்துறை பாராமுகம். நகரசபை உறுப்பினர் குற்றச்சாட்டு.

IMG 4013
IMG 4013

வவுனியா நகரசபையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களிற்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசும், சுகாதாரத்துறையும் பாராமுகமாக இருப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினரும், முன்னாள் உபநகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வவுனியா நகரசபையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களிற்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் இராணுவம் பொலிசார் உட்பட பலருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் முன்களப்பணியாளர்களாக செயற்பட்டு வருகின்ற எமது சுகாதார ஊழியர்களிற்கு இதுவரை தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. அண்மையில் இராணுவத்தால் ஆயிரம் தடுப்பூசிகள் வவுனியாவிற்கு வழங்கப்பட்ட நிலையில் அதிலும் எமது ஊழியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயத்தில் மாவட்ட சுகாதாரத்துறையும், அரசாங்கமும், பாராமுகத்துடன், அலட்சியமாக செயற்ப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக வவுனியா நகரின் சுகாதாரத்தன்மையை பேணி தூய்மைப்படுத்தும் பணியினை எமது ஊழியர்களே முன்னெடுத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்தமாதம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் 16 ஊழியர்களிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. மீளவும் இவ்வாறு தொற்று ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது பரவலடைந்து நகர் முழுவதும் பாரிய சமூகத்தொற்றாக மாறும் அபாயநிலை காணப்படுகின்றது.

எனவே குறித்த விடயத்தினை கருத்தில் கொண்டு வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்களிற்கு விரைவாக தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசும், சுகாதாரத்துறையினரும் முன்னெடுப்பதுடன்,
பொதுமக்களிற்கான தடுப்பூசிகளையும் விரைவில் வழங்கவேண்டும் என்றும்அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.