குன்று குழியுமாக காட்சிதரும் இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலை வரையான வீதி; மக்கள் பலத்த இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர் – ஹஜீதரன்

1626716316741 IMG 2213 resized 1
1626716316741 IMG 2213 resized 1

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால்தொடக்கம் சாலை வரையான சுமார் 13கிலோமீற்றர் தூரமான வீதி, நீண்டகாலமாக குன்றுங்குழியுமாகச் சீரின்றிக்காணப்படுவதால், அவ்வீதியைப் பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுப்பதாக கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினகோபால் ஹஜீதரன் தெரிவித்துள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வு 15.07.2021 அன்று இடம்பெற்ற நிலையில், குறித்த அமர்வில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

IMG 2202 resized

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இரட்டை வாய்க்கால் தொடக்கம் மாத்தளன் வரையான வீதி, வீதிஅபிவிருத்தித் திணைக்களத்தின்கீழ் இருப்பதனால் எமது பிரதேசசபையினால் ஒருமீற்றர் வீதியைக்கூட சீரமைக்கமுடியாத நிலை காணப்படுகின்றது.

கடந்த ஏழுவருடங்களுக்கு முன்பாக குறித்த இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரையான 13கிலோமீற்றர் வீதி சீரமைப்புச்செய்யப்படவிருப்பதாக எமது கிராமமட்ட பொது அமைப்புக்களுக்கு எழுத்துமூலம் கடிதங்கள் வந்திருந்தன.

அதற்குப் பிற்பாடு குறித்த வீதி எவ்வித சீரமைப்புப்பணிகளும் செய்யப்படாதநிலையில், பொதுஅமைப்புக்கள் ஒன்றாக இணைந்து மாவட்டசெயலகத்திற்கு வருகை தந்து இந்த வீதியின் மறுசீரமைப்பு வேலைதொடர்பில் மாவட்டசெயலரிடம் கலந்துரையாடியிருந்தனர். அப்போது குறித்த வீதியின் மறுசீரமைப்பிற்கென ஒதுக்கப்பட்ட நிதி வேறு வேலைத்திட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொது அமைப்புகளுக்கு மாவட்டசெயலர் தெரிவித்திருந்தார்.

அந்த நிதி எந்தவேலைத்திட்டத்திற்காக பயன்படுததப்பட்டது, யார் பயன்படுத்தினார்கள் என்ற விடயத்தினை மாவட்டசெயலர் பொதுஅமைப்புகளுக்குத் தெரிவிக்கவில்லை.

இந் நிலையில் நாம் அடுத்தகட்டமாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம் சென்று கேட்டபோது, இரட்டைவாய்க்கால் தொடக்கம் சாலைவரையான எமது வீதியின் சீர்த்திருத்தப்பணி வேறு ஒரு வேலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதற்குரிய நிதி எப்போது கிடைக்கப்பெறுகின்றதோ அப்போது உடனடியாக இந்த வீதியின் சீரமைப்புப்பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர் தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு தெரிவித்து இன்றுடன் ஏறத்தாள ஏழு வருடங்களாகிவிட்டன.

குறிப்பாக இரட்டைவாய்கால் தொடக்கம் சாலைவரையான சுமார் 13கிலோமீற்றர் தூரமுடைய இடப்பரப்பிற்குள்ளே 450 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர்.

இவ்வாறு அங்கு வசிக்கின்ற மக்கள் குறித்த வீதியினை தமது அன்றாட விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதுடன், அரசதிணைக்களங்களுக்குச் செல்வதற்கும், மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கும், வைத்தியசாலை மற்றும் வங்கி என்பவற்றில் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தவீதி பயன்படுத்தப்படுகின்றது.

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் ஒருஇலட்சம் கிலோ மீற்றர் வீதி என்னும் திட்டத்திற்குள்ளேயும் இந்த வீதி உள்வாங்கப்படவில்லை என்பது கவலைக்குரியவிடயம்.

ஒவ்வொருவருடமும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர், குறித்த வீதியில் நூறு மீற்றர் தூரமளவில் கிரவல் மூலம் செப்னிடுவார்கள். பின்னர் மழைக்காலங்களில் அவர்கள் செப்பனிட்ட பகுதியும் சேதத்திற்குள்ளாகிவிடும்.

இவ்வீதியைப் பயன்படுத்துகின்ற மீனவர்கள், விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அவசரத்திற்கு வைத்தியாசாலைக்கு வருவதற்குக்கூட, புதுக்குடியிருப்புச்சென்று சுமார் 25கிலோமீற்றர் சுற்றியே வரவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுகின்றது.

அதிலும் புதுமாத்தளன் சந்தியில் இருந்து சாலைவரையான வீதி மிகவும் குன்றுங்குழியுமாகக் காட்சிதருகின்றது.

எனவே வீதி அபிவிருத்தித் திணைக்களம் தமது கனகரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, குன்றுங்குழியுமாகக் காணப்படும் குறித்தவீதியின், குழிகளையாவது நிரப்பி தற்காலிக சீரமைப்பினையாவது செய்துதரவேண்டும். அதற்கு தவிசாளர் எழுத்துமூலம் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஓர் கோரிக்கை கடிதத்தினை எழுதி அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

இதற்கு தவிசாளர் க. விஜிந்தன் பதிலளிக்கும்போது,

உறுப்பினர் ஹஜீதரனால் குறிப்பிடப்பட்ட குறித்த வீதியின் தற்காலிக நடவடிக்கைகள் மற்றும், அதற்குப் பின்னரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வீதிஅபிவிருத்திணைக்களத்துடன் பேசுவோம். அந்த நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வோம் என்றார்