மக்கள் பொறுப்புடன் செயற்பட்டாலே டெல்டா வைரஸிலிருந்து மீள முடியும்

Karu Jayasurya
Karu Jayasurya

நாட்டில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதனூடாக மாத்திரமே இந்த நெருக்கடியிலிருந்து முழுமையாக மீள முடியும். 

இவ்வேளையில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிச்செயற்படும் ஒவ்வொரு தனிநபரும், தாம் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் சங்கிலியை நிர்மூலம் செய்வதில் பங்களிப்புச்செய்கின்றோம். என்பதை நினைவில்கொள்ளவேண்டும் என்று முன்னாள் சபாநாயகரும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை மேலும் 23 திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டிருக்கும் நிலையில், இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்ட டெல்டா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளது.

அதுமாத்திரமன்றி நாட்டில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த சுகாதாரப்பாதுகாப்பு மற்றும் பயணக்கட்டுப்பாடுகள் பெருமளவிற்குத் தளர்த்தப்பட்டிருப்பதன் காரணமாக, பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் செயற்படாவிட்டால் டெல்டா வைரஸின் மூலமான கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலைக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று இலங்கைக்கு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளடங்கலாக நாட்டின் சுகாதாரத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கரு ஜயசூரிய அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இலங்கையில் திரிபடைந்த டெல்டா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் நான்காவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக சுகாதாரத்தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இவ்வாறானதொரு நெருக்கடிக்குரிய சூழ்நிலையில் ஏனைய சந்தர்ப்பங்களைப்போன்று இப்போதும் பொதுமக்கள் உரியவாறு பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் மூலமாகவே நாட்டைக் காப்பாற்றமுடியும். 

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ளும் ஒவ்வொரு பிரஜையும் இந்த தொற்றுப்பரவல் சங்கிலியை உடைப்பதற்குப் பங்களிப்பு செய்பவராவார் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.