ரிஷாட் வீட்டில் முக்கிய சாட்சியங்கள் கண்டுபிடிப்பு!

Rishad
Rishad

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த விதான பத்திரண உள்ளிட்ட அதிகாரிகள், இன்று (25) முதன்முறையாக, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்கள், நாளை (26) தினம் நீதிமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் மண்ணெண்ணெய் போத்தல் ஒன்றும், லைட்டர் ஒன்றும், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஒரு சோடி பாதணி என்பன தொடர்பில், காவல்துறை விசாரணையில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளாகி, சுமார் 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதுவரைக் காலமும், அந்த வீட்டில் இருந்த குறித்த வழக்கு பொருட்கள், ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்றிருக்காமை முக்கியமான விடயமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரின் உடலில் 75 சதவீதமான பாகங்கள் எரிந்திருந்ததாகவும், அவரிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய முடியாது போனதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.