கெபிட்டல் மகாராஜா குழும தலைவரின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பு!

SLMMF 1
SLMMF 1

கெபிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ராஜேந்திரன் ராஜமகேந்திரனின் மறைவு ஊடகத் துறைக்கும் நமது நாட்டுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்வேறு துறைகளிலும் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தி, பாரிய வர்த்தகக் குழுமமொன்றை நிறுவி, மக்களுக்கு அரும் பணியாற்றிய ராஜமகேந்திரன் மிகப் பெரும் ஊடக வலையமைப்பை ஆரம்பித்து, இலங்கை ஊடகத் துறைக்கு காலத்தால் அழியாத காத்திரமான பங்களிப்புச் செய்தவர்.

எந்தவொரு சக்திக்கும் அடிபணியாமல் தைரியமாகவும் துணிச்சலாகவும் தனது ஊடக நிறுவனத்தை வழிநடத்திய ஆர். ராஜமகேந்திரன், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முன்னின்றார்.

எவ்வித பேதங்களுமின்றி எல்லா இனத்தவர்களையும் சமமாக அரவணைத்து செயற்படும் ஊடக நிறுவனமாக மகாராஜா நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னுதாரணமான தலைவரே ஆர். ராஜமகேந்திரன்.

40க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை நிறுவி ஆயிரக்கணக்கானோருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்கெடுத்தவர். விக்டோரியா, ரந்தெனிகல, ரந்தம்பே உள்ளிட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்குரிய பாரிய பல்நோக்குத் திட்டங்களை உருவாக்குவதற்கு தமது நிறுவனத்தினூடாக அளப்பரிய பங்களிப்பைச் செய்த அன்னார், இலங்கை முதலீட்டு சபையின் அங்கீகாரம் பெற்ற முதலாவது முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கியமை கோடிட்டுக் காட்டத்தக்கது.
பல்வேறு துறைகளில் பலரும் முன்னேறுவதற்கு அவர் நல்கிய தன்னலமற்ற ஒத்துழைப்பு என்றென்றும் நினைவுகூரத்தக்கது.

சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் இயங்கிவரும் 7 ஊடக நிறுவனங்களை வழிநடத்தி, ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்கள் உருவாகுவதற்கும் வழி வகுத்தவர் அவர்.

அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், கெபிட்டல் மகாராஜா குழும சொந்தங்கள், ஊடகவியலாளர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களின் துயரத்திலும் பங்கு கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.