ராஜபக்ச அரசின் அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடெங்கும் போராட்டங்கள் – சஜித்

image 61264ccd5d
image 61264ccd5d

“ராஜபக்ச குடும்ப அரசின் அடக்குமுறைகள் – அட்டூழியங்களுக்கு எதிராகவே நாடு முழுவதிலும் ஜனநாயகப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த அரசின் ஆட்சி கவிழும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அதிபர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், தாதியர்கள், சுகாதாரப் பிரிவினர், பொது அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இன்று அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து விட்டனர்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தன்னிச்சையான முடிவுகளை எடுத்து அராஜக ஆட்சி நடத்தும் இந்த அரசை நாட்டிலுள்ள அனைவரும் வெறுத்து விட்டார்கள். அதனால் அவர்கள் வீதிகளில் இறங்கி அரசுக்கு எதிராகப் போராடுகின்றார்கள்.

ராஜபக்ச அரசின் அடக்குமுறைகள் – அட்டூழியங்களுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்புகின்றார்கள்.

இவ்வாறான ஜனநாயகப் போராட்டங்களை நாம் மதிக்கின்றோம். இதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம்.

இந்த அரசின் ஆட்சி கவிழும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது இந்த ஜனநாயகப் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

போலியான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, நாட்டு மக்களை ஏமாற்றிப் பிழைக்கலாம் என்று நினைத்தது. ஆனால், நாடு முழுவதிலும் இன்று அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன” – என்றார்.