கௌதாரிமுனை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் – டக்ளஸ்

bde2fd7f 96cd 4de3 a4bd ff0c359cd155
bde2fd7f 96cd 4de3 a4bd ff0c359cd155

கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்தாமல், நூற்றுக்கு மேற்பட்ட கௌதாரிமுனை மக்கள் இன்று(28-07-2021) ஆர்வத்துடன் வயல்காணிகளுக்கு விண்ணம் செய்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை மண்ணித்தலை சிவன்கோவில் முன்னால் இறங்குதுறையடியில் மக்கள் சந்திப்பை நடத்தி, கடலட்டைப் பண்ணைகளையோ வயல்காணிகளையோ பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கௌதாரி முனை மக்களை மிரட்டியிருந்தார்.

எனினும், அவரது எதிர்ப்புக்கூட்டம் நடைபெற்ற அன்றே, அவரது கருத்துக்களைப் பொருட்படுத்தாமல், கடலட்டைப் பண்ணைகளுக்காக முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள், நக்டா நிறுவன அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் பிரதிநிதிகளுடன் கடலுக்குச் சென்று கடலட்டைப் பண்ணைகளை அளவிட்டு எல்லையிடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

எல்லை அளவீட்டுப் பணிகள் நிறைவடைந்தவுடனேயே, பயனாளிகளுக்கான ஒரு தொகுதி வலைகளையும் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, கௌதாரிமுனை கிராமசேவையாளர் அலுவலகத்தில் இன்று பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் றுஷாங்கன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம் ஆகியோருடன், காணி அதிகாரி, கிராமசேவையாளர் உள்ளிட்ட குழுவினர் வயல்காணிகளுக்கான பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

வயல் காணிகளைப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே சுமா் 91 பயனாளிகள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்றையதினம் மேலும் பல பயனாளிகள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததால், 114 பேர் வயல்காணிகளுக்கான விண்ணப்பங்களைச் செய்திருந்தனர்.

இவர்களுடைய விபரங்களைத் திரட்டிய கௌதாரிமுனை கிராம சேவையாளர் மற்றும் பூநகரி பிரதேச செயலக அலுவலர்கள் விரைவில் பட்டியலை ஆய்வு செய்து வயல்காணி வழங்குவதற்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் விபரத்தை வெளியிடுவர்.

ஏற்கனவே, கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, இதற்கான ஆலோசனைகளை மாவட்டச் செயலாளருக்கும் வழங்கியிருப்பதால், விரைவில் காணிப் பயன்பாட்டுக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்று பயனாளிகளுக்குரிய காணிகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டு, காலபோகச் செய்கையில் ஈடுபட வகைசெய்துகொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, வயல் செய்கைக்கென கமநலசேவைத் திணைக்களத்தின் ஊடாக இரண்டு உழவு இயந்திரங்களை வழங்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.