வட்டுவாகல் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு போராட்டத்தால் கைவிடப்பட்டது!

DSC07086
DSC07086

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் கோத்தபாய கடற்படை முகாமுக்கு சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டுவாகல் கோத்தபாய கடற்படைதளம் அமைந்துள்ள காணி அளவீட்டுப்பணிகள் இன்று(29) முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை நிறுத்தியுள்ளார்கள் .

காணியின் உரிமையாளர்கள் கிராம மக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர்கள் க.விஜிந்தன்,புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உபதவிசாளர் க.ஜெனமேஜெயந், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன்,எம்.கே.சிவாஜிங்கம்,நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகரதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

குறித்த காணிகள் இன்று காலை 9.00 மணிக்கு அளவிடப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையில் நில அளவைத்திணைக்களத்தினர் காலை 7.45 மணியளவில் கடற்படை முகாமிற்கு சென்றுள்ளார்கள்.

இன்னிலையில் அளவீட்டு பணிக்கு பொறுப்பான அதிகாரி முகாமுக்குள் சென்றதும் ஏனைய அளவீட்டு பணிகள் மேற்கொள்ளவுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்கள் வருகை தந்த வாகனத்தினை கடற்படை முகாமிற்கு முன்னால் போராட்டகாரர்கள் தடுத்துநிறுத்திய நிலையில் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் காவல்துறையினர் வருகை தந்து குறித்த காணிகள் மக்களுக்கு வழங்குவதற்காகவே அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அளவீட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போராட்ட காரர்களிடம் தெரிவித்துள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பில் இதுவரை காலமும் யாரும் உத்தரவாதம் கொடுக்காத நிலையில் காவல்துறையினர் உத்தரவாதம் வழங்கிய நிலையில் அனைத்து தரப்பினையும் ஒன்றிணைத்து மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி அதற்கான உறுதி மொழிகளை வழங்கி பின்னர் அளவீட்டுப்பணிகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கும் காணி உண்டு அதனை கடற்படைக்கு வழங்கவுள்ளதாக சம்பவ இடத்திற்கு வருகைதந்த நீர்கொழும்பை சேர்ந்த மூவர் காவல்துறையினரிடம் அளவீடு செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் போராட்டக்காரர்கள் குறித்த நபர்களுடன் கலந்துரையாடி இறுதியாக காவல்துறையினர் அளவீட்டுப்பணிகளை மாவட்ட செயலக கலந்துரையாடலுக்கு பின்னர் நடாத்துவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை ஒத்துக்கொண்ட போராட்டகாரர்கள் நில அளவை திணைக்கள அதிகாரிகளின் வாகனத்தினை திருப்பி அனுப்பினர்.

இதனை தொடர்ந்து கடற்படையினர் போராட்டக்காரர்களை ஆயுதமுனையில் அந்த பகுதியில் இருந்து அகற்றி விட்டு கடற்படை வாகனத்தில் சென்று நில அளவை திணைக்கள அதிகாரிகளை மாற்று பாதை ஊடாக கடற்படை முகாமிற்குள் அழைத்து சென்றுள்ள ஏற்கனவே முகாமுக்குள் சென்றிருந்த அதிகாரியை வைத்து அளவீடு செய்ய முற்பட்ட நிலையில் மீண்டும் குளப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவல்துறையினரும் திருட்டுதனமான வேலைக்கு துணைபோவதாக குற்றம் சாட்டி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஏ35 வீதியினை மறித்து வட்டுவாகல் பாலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

காலை 9.00 மணிதொடக்கம் 1.30 மணிவரை வீதியினை மறித்து வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது போராட்டக்காரர்கள் அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு வீதி மறிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது பிரச்சனைக்கு தீர்வினை தாருங்கள் என கோரியுள்ளதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் வருகைதந்து மக்களின் கோரிக்கைகளை அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்திய நிலையில் அரசாங்க அதிபர் ஊடாக நிலஅளவை திணைக்களத்திற்கு விடயம் எடுத்துக் கூறப்பட்டு அளவீட்டுப்பணிகள் நடைபெறாது என போராட்டக்காரர்களிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்படை முகாமிற்குள் சென்ற நில அளவைத்திணைக்கள அதிகாரிகளே இதனை சொல்ல வேண்டும் அவர்கள் உடனடியாக வெளியே வரவேண்டும் என கோரியபோது நிலஅளவைத்திணைக்கள அதிகாரிகள் போராட்ட காரர்களிடம் வந்தவேளை குறித்த இடத்தில் அதிகாரிகளுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்படலாம் என காவல்துறையினர் அவர்களை திருப்பி வேறு வழி ஊடாக அனுப்ப முற்றபட்டபோது போராட்டகாரர்கள் வாகனத்தினை மறிக்க முற்பட்ட போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை தள்ளிவிட்டு வாகனத்தினை எடுத்து செல்ல அனுமதித்துள்ளார்கள்.

இந்நிலையில் அளவீட்டுப்பணிகளில் ஈடுபட்ட நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் நேரில் வந்து பதில்கூறும் வரை வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரால் மாவட்ட நிலஅளவைத்திணைக்கள அத்தியட்சகரை அழைத்து போராட்டகாரர்களின் முன்னாள் வழங்கிய வாங்குறுதியினை தொடர்ந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றுள்ளார்கள்.

அரசாங்க அதிபர் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தி முடிவு கிடைக்கும் வரை அளவீட்டுப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்.