தாதியர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

International Nurses Day 2020 2
International Nurses Day 2020 2

முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கு தாதியர் பதவிகளுக்கு நிலவும் 35 சதவீத வெற்றிடங்களை நிரப்புவதற்காக முதலாம், இரண்டாம் மற்றும் விசேட தரங்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முறைமைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எம் முனசிங்கவினால் கையெழுத்திடப்பட்ட குறித்த வர்த்தமானி, இலங்கை தாதியர் சேவை யாப்பில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த முதலாம் தர வைத்தியசாலை சேவைக்கான தாதியர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்கு, மேற்கூறிய தரங்களில் இருந்து தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர் டிப்ளோமா கற்கை நெறியினை தொடர வேண்டும்.

இவ்வாறு கற்கை நெறியினை தொடர்வதற்காக எழுத்து மூல பரீட்சை ஒன்று நடத்தப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 65 சதவீத வெற்றிடத்திற்காக இரண்டாம், முதலாம் மற்றும் சிறப்பு தரங்களில் தகுதிகளை கொண்டவர்கள் சிரேஷ்டத்துவம், திறமை, தகுதி, வேலை மற்றும் நடத்தை ஆகியவற்றின் அடிப்படையில், சுகாதார செயலாளரினால் அங்கிகரிக்கப்பட்ட நேர்முக தேர்வு சபையொன்றினால், நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

அதில் தேர்ச்சி பெறும் உத்தியோகத்தர்கள் டிப்ளோமா கற்கை நெறிக்காக தெரிவுசெய்யப்படவுள்ளார்கள்.

குறித்த 65 சதவீத தொகுதிக்கு, விண்ணப்பிப்போர், 5 வருடங்களில் உரிய வேதன ஏற்றங்கள் அனைத்தும் பெற்றிருப்பதுடன், அரசாங்க சேவை ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்திற்கு அமைய ஒழுக்காற்று தண்டனை பெற்றில்லாத உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும்.

அதேநேரம், 52 வயதிற்கு மேற்படாதவாறு இருத்தல் வேண்டும் என்பதுடன், பதவி உயர்வு திகதிக்கு முன்னர் 5 வருடங்களுக்குள் திருப்திகரமான செயற்திறனையோ அல்லது அதனைவிட மேலான செயற்திறனையோ வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.