கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து வெளியேறுகிறோம் – ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கம்

IMG 20210809 141929
IMG 20210809 141929

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் முடிவுறுத்தப்படும் வரை அனைத்து விதமான கற்றல், கற்பித்தல் பணிகளிலிருந்தும் தற்காலிகமாக ஒதுங்கியிருப்பதாக வவுனியா மாவட்ட ஒண்றிணைந்த அதிபர் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள், சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டங்கள் வலுப்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில் வவுனியா மாவட்டத்திலும் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து ஒரு சம்மேளனத்தினை உருவாக்கியுள்ளோம். அதனூடாக போராட்டத்தினை வலுவுடையதாக மாற்றவேண்டிய தேவை எமக்குள்ளது.

குறிப்பாக பாடசாலையில் தினசரி வரவுகளை உறுதிப்படுத்தாது இருத்தல், தொலைபேசி மூலமாக தகவல்களை வழங்காதிருத்தல், கடமைநேரத்தில் பாடசாலைக்கு செல்லாதிருத்தல், போராட்டம் முடியும் வரை வீடுகளில் இருந்து பணியாற்றாமல் இருத்தல், ஆகிய தீர்மானங்களை இனிவரும் காலங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது .இதேவேளை கொவிட் சூழலை கருத்தில் கொண்டு எமது போராட்ட வடிவங்களையும் மாற்றியுள்ளோம் என்றனர்.

குறித்த ஊடகசந்திப்பில் இலங்கை ஆசிரியர்சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைசங்கம், அதிபர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம், ஏகாபத்த குருசேவாசங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்தது.