அக்கரைப்பற்றில் ஆமைகளை விற்பனை செய்தவர் 16 ஆமைகளுடன் கைது!

WhatsApp Image 2021 08 10 at 17.55.12
WhatsApp Image 2021 08 10 at 17.55.12

அம்பாறை அக்கரைப்பற்று வாவியில் இருந்து சட்டவிரோதமாக ஆமைகளை பிடித்து இறைச்சிக்காக நீண்டகாலமாக விற்று வந்த அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் 16 பால் ஆமைகளை மோட்டர்சைக்கிளில் இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை  எடுத்துச் சென்ற நிலையில் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

மாவட்ட சிரேஷ்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து அக்கரைப்பற்று காவல் நிலைய மக்கள் தொடர்பாடல் மற்றும் கொரோனா தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எம். சதாத் தலைமையிலான காவல்துறையினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அக்கரைப்பற்று நகர் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் அக்கரைப்பற்று வாவியில் இருந்து ஆமைகளை பிடித்து உரப்பையில் போட்டு மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு கண்ணகிபுரத்திற்கு எடுத்துச் சென்ற போது அக்கரைப்பற்று நகர்ப்பகுதியில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி அவரை மடக்கி காவல்துறையினர் பிடித்தனர்.

அதன்போது மோட்டார்சைக்கிளில் எடுத்துச் சென்ற உரப்பையை சோதனையிட்டபோது அதில் இருந்து 16 பால் ஆமைகளை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று கண்ணகிபுரத்தைச் சேர்ந்தவர் எனவும் இவர் ஆமைகளை சட்டவிரோதமாக பிடித்து இறைச்சியாக்கி அதனை அம்பாறை நகரிலுள்ள கோட்டல்களுக்கு நீண்ட காலமாக விற்பனை செய்துவருதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.