அரியாலை பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு கோரிக்கை

transfer
transfer

யாழ்ப்பாண மாவட்டத்தில் மணல் கடத்தல்காரர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் உள்ள தொடர்பின் காரணமாக சிறு குற்றம் புரிபவர்களும் குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதாகவும் இதன் காரணமாக அரியாலையில் கடமையில் உள்ள அனைத்து பொலிஸாரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு யாழ் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரெமிடியஸ் கேட்டுக்கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான கலந்துரையாடலில் அவர் இந்த குற்றச் சாட்டினை முன்வைத்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் அரியாலை,வடமராட்சி ஆகிய பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. மணல் அகழ்வது குறித்து பொலிஸாருக்கு தொலைபேசியில் அறிவித்தால் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதற்கு முன்னமே கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் ஊடாக தகவல் வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்கள்,தலைக்கு கவசம் அணியாதவர்கள், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் செலுத்துபவர்கள் பொலிஸாரிடம் சிக்கினால் உடனடியாக மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.

அவர்கள் தங்களின் தொலைபேசி ஊடாகவே பொலிஸாருடன் பேசி விடுக்கின்றனர். அந்தளவிற்கு பொலிஸாருக்கும் மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையில் நெருக்கம் காணப்படுகின்றது. அரியாலையில் கடமையில் இருக்கும் அத்தனை பொலிஸாரையும் இடமாற்றம் செய்யுங்கள். அங்கு புதிய வேறு பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிப்பதன் மூலம் மணல் கொள்ளை ஓரளவிற்கு குறையும் என தெரிவித்தார்.

இதற்குப் பதில் அளித்த யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியேட்சகர் மகேஷ் சேனாரத்ன,

யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற சாதாரண மக்களுக்கு மணல் தேவையாக உள்ளது. நாம் மணல் கடத்தலில் ஈடுபடும் மாபியாக்களை பிடிப்பதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையின் காரணமாக மக்கள் எமக்கு தகவலை தந்து ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.