இந்தியப் மீன்பிடிப் படகுகளை பார்வையிட டக்ளஸ் விஜயம்!

7a376dc6 d57c 48d9 b369 437d1b5d3b1a
7a376dc6 d57c 48d9 b369 437d1b5d3b1a

அத்துமீறி எல்லை தாண்டி சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தியக் கடற்றொழிலாளர்களின் மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (11.08.2021) நேரடியாக பார்வையிட்டார்.

நீண்ட காலமாக காரைநகர் கடற்படை தளத்தினை அண்டிய பகுதியில், சுமார் 210 இந்திய மீன்பிடிப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளமையினால், குறித்த படகுகளை விற்பனை செய்து கிடைக்கின்ற பணத்தை தமக்கு வழங்குமாறு, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

அதேபோன்று, குறித்த படகுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை படகு உரிமையாளர்களுக்கு வழங்குமாறு இந்தியத் தரப்புக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, கடற்றொழில் அமைச்சர் நேரடியாகச் சென்று படகுகளை பார்வையிட்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் ஊடாக விடுவிக்கப்பட்ட போதிலும், இந்தியக் கடற்றொழிலாளர்களினால் எடுத்துச் செல்லாது கைவிடப்பட்ட நிலையில் சுமார் 138 படகுகளும், 2018 ஆம் ஆண்டு இலங்கையில் புதிய சட்டம் உருவாக்கப்பட்ட பின்னர் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சுமார் 70 படகுகளும்  காரைநகரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.