இரத்தினபுரி சிறுமி விவகாரம்: விசாரணை பொறுப்பு சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம்

images 1 3
images 1 3

இரத்தினப்புரி – எல்லேகெதர பகுதியில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகள் காவல்துறை சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இரத்தினப்புரி – எல்லேகெதர பகுதியை சேர்ந்த தரம் 10இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். காணாமல் போன சிறுமி வீட்டிலிருந்து செல்வதற்கு முன்னர் எழுதிய கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதன்படி, தமக்கு ஆண் தோழர் ஒருவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவ்வாறு ஒருவர் இல்லை என குறித்த சிறுமி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தாம் பொலன்னறுவை பகுதியில் உள்ளதாக, தம்மை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி இலக்கத்தையும் குறித்த சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் சிறுமி தமது பெற்றோருக்கு அழைப்பை ஏற்படுத்தி தம்மை காப்பாற்றும் படி கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் அழைப்பை மேற்கொண்ட தொலைபேசி எண்கள் செயலிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதோடு, சிறுமியின் ஆண் தோழர் என கூறப்படும் நபரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்