மட்டக்களப்பில் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தப்பி ஓட்டம்!

WhatsApp Image 2021 08 17 at 10.13.26 1
WhatsApp Image 2021 08 17 at 10.13.26 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் கார் ஒன்றில் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவரை 300 கிராம் ஜஸ் போதைப்பொருள் 250000 ரூபாவுடன் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி காவல் நிலையத்தில் தடுத்துவைத்த நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய காத்தான்குடி காவல் பிரிவிலுள்ள கல்லடி விஷ்னுகோவஜல் வீதியில் வைத்து சம்பவதினமான நேற்று திங்கட்கிழமை (16) இரவு விசேட அதிரடிப்படையினர் கார் ஒன்றில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட வியாபாரிகள் இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து சுமார் 38 இலச்சம் ரூபா பெறுமதியான 300 கிராம் ஜஸ் போதைபொருள் மற்றும் 15 கிராம் ஹரோயின் போதைப்பொருள் 250000 ரூபா பணம் என்பவற்றை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு கூளாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட இருவரையும் விசேட அதிரடிப்படையினர் காத்தான்குடி காவல் நிலையத்தில் ஒப்படைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான காத்தான்குடி ஒல்லிக்குளத்தைச் சேர்ந்தவர் அங்கிருந்து வெளியேறி காவல் நிலையத்துக்கு வெளியே மோட்டர்சைக்கிளில் காத்திருந்த ஒருவரின் மோட்டர்சைக்கிளில் ஏறி தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் போதைவஸ்து வியாபாரியை மோட்டர்சைக்கிளில் ஏற்றி தப்பிக்க வைத்தவரை கைது செய்ததுடன் தப்பி ஓடியவரை கைது செய்ய நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை கைது செய்யப்பட்ட வியாபாரிகள் வழங்கிய தகவலுக்கமைய கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள ஒரு காவல்துறை உத்தியோகத்தரின் வீட்டை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு அங்கு காவல்துறை உத்தியோகத்தரின் நண்பன் ஒருவரை 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது