நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி இன்மையால் மக்கள் அவதி!

IMG 20210820 WA0012
IMG 20210820 WA0012

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர் காவுவண்டி இன்மையால் பிரதேச மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியசாலைக்கு மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட மக்கள் மட்டுமன்றி அண்மையில் உள்ள வெளியிட மக்களும் மருத்துவ வசதிகளுக்காக வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை குறித்த வைத்தியசாலைக்கு ஓர் நோயாளர் காவுவண்டி உள்ள போதும் அதன் சாரதி விடுப்பில் செல்லும் வேளை பதில் கடமை சாரதி இன்மையால் மக்கள் பெரும் அவதிப்படுவதாக தெரிவித்தனர் .

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் காவுவண்டிகள் உள்ளபோதும், நட்டாங்கண்டல் வைத்தியசாலையின் நோயாளர் காவுவண்டியின் சாரதி விடுப்பில் செல்லும் காலத்தில் குறித்த நோயாளர் காவுவண்டி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் விடப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் நட்டாங்கண்டல் பிரதேச வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு வினவியபோது, தமது அனுமதி பெறப்படாமலேயே குறித்த நோயாளர் காவுவண்டி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் விடப்படுவதாகவும், இன்றைய தினம்(20/08/2021) கொவிட்-19 தடுப்பூசி பெற்றுக்கொள்ள மக்கள் வருகை வந்திருப்பதாகவும், ஆனால் மக்களுக்கான ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுமிடத்து நோயாளர் காவுவண்டி கடமையில் இல்லை என்றும், தமது வைத்தியசாலையின் சாரதி விடுப்பில் செல்லும் சந்தர்ப்பங்களில் பதில் கடமை சாரதி இன்மையாலும் நோயாளர் காவுவண்டி மல்லாவி ஆதார வைத்தியசாலையில் விடப்படுவதாலும் பிரதேச மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை மிகவும் பின்தங்கிய கிராமமான ஜயங்கன்குளம் பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் காவுவண்டி உள்ள போதிலும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக நோயாளர் காவுவண்டி இன்னோர் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களும் நோயாளர் காவுவண்டி இன்மையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.