பனங்காடு பிரதேச வைத்தியசாலை திங்கட்கிழமை மீள திறக்கப்படும்:சுகுணன் உறுதியளிப்பு

IMG 20210821 WA0000
IMG 20210821 WA0000

அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் அலிக்கம்ப பிரதேசத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்த சிலருக்கும் அங்கு சேவையாற்றும் வைத்தியருக்குமிடையில் இடம்பெற்ற முரண்பாடு காரணமாக அங்கு பணியாற்றும் வைத்தியர் ஒருவர் தாக்கப்பட்டதனால் அங்கு கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிகள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பணிக்கு வராமை காரணமாக சில நாட்களாக வைத்தியசாலை பூட்டப்பட்ட நிலையில் உள்ளது.

இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இன்று (21) அரசியல் பிரதிநிதிகளுக்கும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனுக்குமிடையிலான சந்திப்பு கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இடம்பெற்றது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கு. சுகுணனை நேரில் சந்தித்து அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் தாக்கப்பட்ட விடயத்திற்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இவ் விடயமானது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இருந்தாலும் அசாதாரண காலப்பகுதியான இந்த காலப்பகுதியில் பனங்காடு பிரதேச மக்களின் நன்மை கருதி வைத்தியசாலையை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர். 

இங்கு கருத்து தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்தியர் கு. சுகுணன் இந்த விடயம் தொடர்பில் மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு தெரியப்படுத்தி உள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில்

காவற்துறையினர் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் வைத்தியரை தாக்கியவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் நன்மைகருதி பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த வைத்தியசாலையை திறக்க தான் நடவடிக்கை எடுக்க உறுதியளித்ததாக மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஊடகங்களுக்கு இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்தார்.