முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட சடலம் மாறியதால் குழப்பம்

received 860046534872500
received 860046534872500

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பட்ட சடலம் ஒன்று மாற்றி கையளிக்கப்பட்டுள்ளதாக திருமுறுகண்டியைச் சேர்ந்த உயிரிழந்த முதியவர் ஒருவரின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய தாத்தா (குமாரன் கோபால்) என்பவர் திடீரென உயிரிழந்திருந்தார்.

அவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அன்றே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அவருடைய சடலத்தைக் கொண்டு வந்திருந்தோம்.

இந்நிலையில் நேற்று பி.சி.ஆர் முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தாத்தாவுக்கு கொரோனாத் தொற்றில்லை என்று எங்களுக்கு சுகாதாரத் தரப்பினரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று சடலத்தைப் பொறுப்பேற்பதற்காக அங்கு சென்றபோது சடலத்தைக் காணவில்லை. அது குறித்து கேட்டபோது,

சடலம் நாயாறுப் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றினால் பெற்றுச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாயாறுப் பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடைய சடலம் வவுனியாவிற்கு எரியூட்டுவதற்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

இதனால் எங்கள் தாத்தாவின் சடலம் இல்லாமல் நாங்கள் வெறும் கையுடன் நிற்கிறோம். இது தொடர்பில் உரிய பதிலினை வைத்தியசாலை நிர்வாகம் தர மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.