பயங்கரவாதத் தடை சட்டத்திற்கமைய பரிந்துரைகளை முன்வைப்பதற்கான ஆலோசனை சபை அடுத்தவாரம் கூடுகிறது

kotta
kotta

பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு அமைய, பரிந்துரைகள் மற்றும் தீர்மானங்களை முன்வைப்பதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை சபை எதிர்வரும் திங்கட்கிழமை முதன்முறையாக கூடவுள்ளது.

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடை சட்டத்தின் 13ஆவது பிரிவுக்கு ஏற்ப, குறித்த ஆலோசனை சபை ஜனாதிபதியினால் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டது.

முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான குறித்த ஆலோசனை சபையில், ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற மன்றாடியார் நாயகம் சுஹத கம்லத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து கண்டறிதல், விடுதலை செய்தல், பிணை வழங்குதல் உள்ளிட்ட எதிர்காலத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் இந்த சபை வழங்கவுள்ளது.

நீண்ட காலமாக ஆலோசனை சபை நியமிக்கப்படாத காரணத்தால், இதுவரையில் சிறையில் உள்ளவர்களுக்கு தங்கள் உரிமைகள் தொடர்பிலான விடயங்களை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்த ஆலோசனை சபை நியமிக்கப்பட்டதன் மூலம், கைதிகள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.