வந்தாறுமூலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!

IMG 20191225 WA0031
IMG 20191225 WA0031

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வந்தாறுமூலை கிராமத்தில் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக சுமார் 250 மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான ச.வியாழேந்திரன் அவர்கள் தனது கருத்தை இவ்வாறு தெரிவித்தார்.

வந்தாறுமூலை கிராமமானது பல புத்திஜீவிகளை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டு இருக்கின்ற கிராமம் எனவும் அதன் ஒரு வெளிப்பாடே இங்கு காணப்படுகின்ற வைத்தியர்களான வைத்தியர் சிறிநாத் அவர்களும் ஜெயக்கிருஷ்ணா அவர்களும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவர்கள் போன்று இன்று கற்றல் உபகரணங்களை பெற்றுச் செல்கின்ற மாணவர்கள் உருவாக வேண்டும் எனவும் மாணவர்கள் கல்வி தொடர்பாகவும், மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கையிலும் பெற்றோர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தன்னால் முடிந்த அளவு வந்தாறுமூலை கிராமத்திற்கு கடந்த காலங்களில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் எதிர்காலத்தில் வந்தாறுமூலை இளையோர் அமைப்பிற்கு ஊடாக வந்தாறுமூலை பிரதேசத்தின் நன்மை கருதி பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

வந்தாறுமூலை சமூக அமைப்புக்கள் போன்று இன்னும் பல கிராமங்களில் இளைஞர்களை உள்ளடக்கிய சமூக அமைப்புக்கள் காணப்படுவதாகவும் அந்த கிராமம் சார்ந்த இளைஞர்களினதும், புத்திஜீவிகளினதும் பங்களிப்பு காத்திரபூர்வமானது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்காக அர்பணிப்புடன் செயற்பட்ட வந்தாறுமூலை இளையோர் அமைப்பின் அத்தனை உறுப்பினர்களுக்கும், தனது விசேடமான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக வந்தாறுமூலை வரலாற்றுச் சிறப்புமிகு நீர்முகப்பிள்ளையார் ஆலய பிரதம குரு வணக்கத்துக்குரிய சிவ ஸ்ரீ மாணிக்கம் ஜெயம்பலம் குருக்கள் அவர்களும் மற்றும் வந்தாறுமூலையினைச் சேர்ந்த ஏறாவூர்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்களும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயக்கிருஷ்ணா அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.