சர்வதேசத்திடம் நீதிகோரியும் இன்றுவரை எமக்கான ஒரு நல்ல பதிலை தரவில்லை – வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள்

received 368046078277200
received 368046078277200

சர்வதேசத்திடம் தொடர்ச்சியாக நீதிகோரியும்  சர்வதேசம் கூட இன்று வரை எமக்கான ஒரு நல்ல பதிலை தரவில்லை என  முல்லைத்தீவு  வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுகின்றனர்  

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று  சர்வதேசத்திடம் நீதிகோரி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  வீடுகளில் இருந்தவாறே அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ள அதேவேளை முல்லைத்தீவு  வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் சங்க தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை சற்று முன்னர் மேற்கொண்டிருந்தனர்  இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்

கருத்து தெரிவித்த முல்லைத்தீவு  வலிந்து காணாமல் ஆக்கப்படடவர்களின் உறவினர்கள் சங்க செயலாளர் பிரபாகரன் றஞ்சனா  அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

இன்றைய தினம் ஆவணி 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றைய நாளில் ஒவ்வொரு வருடமும் பாரியளவில் கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வந்தோம் ஆனால் இம்முறை கொவிட் 19 காரணமாக சுகாதார பிரிவினரால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் பயணத்தடை காரணமாக நாங்கள் இன்றைய தினம் வீதியில் போராட்டங்களை நடத்த முடியாததால்  ஒவ்வொரு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் வீடுகளிலேயே ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை செய்து கொண்டிருக்கின்றோம்

போர் முடிந்து பன்னிரெண்டு வருடங்கள் கடந்த காலத்திலும் இன்று வரை எங்களுடைய உறவுகளை தேடி 12 வருட காலமாக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கின்றோம் ஐக்கிய நாடுகள் சபையின் 38 வது கூட்டத் தொடரிலிருந்து எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் சென்று எங்களுடைய பிரச்சினைகளை சொல்லி அதற்கான தீர்வுகளை பெற்றுத் தருமாறு கோரியும்  ஐக்கிய நாடுகள் சபை கூட இன்று வரை எமது கோரிக்கைக்கு செவி சாய்த்து இதுவரை எந்தவித பதில்களையும் தரவில்லை

இன்று முல்லைத்தீவில் 1635 நாளாக தொடர் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது கொரோனா  தொற்று காரணமாக அனைவரும்  துன்பப்பட்டு கொண்டிருக்கின்ற நேரம் எங்களுடைய உறவுகளை தேடி நாங்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம் காணாமல் போனோர் அலுவலகங்கள் மக்களுக்கு தெரியாமல் இரகசியமான முறையில் உருவாக்கப்படுவதன் மர்மம் என்ன  என்பது  கூட விளங்காமல் இருக்கின்றது அதனை விட இந்த அரசாங்கத்தினுடைய அமைச்சரவை அமைச்சர்கள் கூறுகிறார்கள் எங்களுடைய  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வெளிநாடுகளில் இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்கள் அவர்களுக்கு தெரியாமல் எங்களுடைய உறவுகள் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு இல்லை எனவே அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருந்தால் எங்களுடைய உறவினர்கள் உடைய பெயர் பட்டியலை வெளியிடுங்கள்

அதனை விடவும் வீடுகளுக்கு வருகின்ற புலனாய்வாளர்கள் பெற்றோர்களை மிரட்டி உங்களுடைய பிள்ளைகள்  கொழும்பில் இருக்கிறார்கள் வாருங்கள் அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்று காட்டுகிறோம் என்றும்  உங்களுக்கு உதவி செய்கின்றோம் வீடு கட்டித் தருகிறோம் இதர உதவிகளை செய்கிறோம் என்றும்  கூறுகின்றார்கள் எனவே இந்த இடத்தில் நான் முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரியப்படுத்துவது என்னவெனில் என்னுடைய மகனை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தது போல ஏராளமான பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்கள் இதுவரை காலமும் அவருடைய கையில் ஒப்படைத்தவர்களை என்ன செய்தார்கள்

இவ்வாறு கொழும்பிலிருந்து புலனாய்வுப் பிரிவினர் வருகை தந்து எனக்கு சொன்னார்கள்  என்னுடைய மகன் கொழும்பில் இருக்கிறார் வாருங்கள் பார்ப்போம் என்று கூறினார்கள் ஆனால் அங்கு அவர் இருப்பதை படத்தை கொண்டு வந்து காட்டுமாறு அல்லது தொலைபேசி ஊடாக அவரோடு கலந்துரையாடுவதற்கு ஒழுங்கு செய்து தருமாறு கடந்த மாதம் 31ம் திகதி வந்தவர்களிடம் கோரியிருந்தேன்   இன்றுவரை எந்தவிதமான பதிலும் இல்லை

ஆகவே இவ்வாறு அரசாங்கத்தின் இந்த இழுத்தடிப்பு செயற்பாடுகளை தவிர்த்து இந்த கொரோனா காலத்தில் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற உறவுகள் இங்கு நாங்கள் கஷ்டப்படுகிறது போல் அவர்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் எனவே அவர்களை விடுதலை செய்தால் எங்களுடைய உயிர் பிரிவதற்கு முன் எங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து வாழ முடியும்   எனவும் ஐக்கிய நாடுகள் சபை வருகின்ற நாற்பத்தி எட்டாவது கூட்டத் தொடரிலேனும்  எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசாங்கத்திற்கு ஒரு  அழுத்தம் கொடுத்து ஒரு நல்ல பதிலை பெற்றுத்தர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்