பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் பணிப்புரை

1630979597 2059337 hirunews
1630979597 2059337 hirunews

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரணைக்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பிற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளுக்கே பிரதமர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

30 பில்லியன் ரூபா செலவிலான குறித்த திட்டத்தை 2024 ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

பொரளையிலுள்ள வெலிக்கடை சிறைச்சாலை 40 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகும்.

சிறைச்சாலை தலைமையக கட்டிடம் உள்ளிட்டவற்றை விருந்தக திட்டமொன்றிற்காக ஒதுக்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.

மேலும் வேறு முதலீடுகளுக்காக அதன் 35 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், இதுவரை விருப்பம் தெரிவித்துள்ள முதலீட்டாளர்களுக்கு மேலதிகமாக மேலும் சில முதலீட்டாளர்கள் இருப்பின் அவர்களையும் இதில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், சில பெண் கைதிகளுடன் குழந்தைகளும் காணப்படுவதால் அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், குழந்தைகள் உள்ள கைதிகளை வேறுபடுத்தி குழந்தைகளுக்காக பராமரிப்பு மையமொன்று அமைக்கப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், திட்டம் செயற்படுத்தப்படும் ஹொரண மில்லேவ பிரதேசத்திலுள்ள நிலப்பரப்பு பெருந்தோட்ட நிறுவனமொன்றிற்கு சொந்தமான இறப்பர் உற்பத்தி செய்யப்பட்ட நிலமாகும்.

அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 123 ஊழியர்களுக்கு இழப்பீடு செலுத்தப்படும்.

அவர்கள் வசித்த 57 தோட்ட குடியிருப்புகளுக்கு பதிலாக நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 57 புதிய வீடுகள் அமைத்து கொடுக்கப்படும்.

முதலில் மெகசின் சிறைச்சாலையும் அதன்பின்னர் ஏனைய சிறைச்சாலைகளும் மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதுடன், வெலிக்கடை தூக்குமேடையும் ஹொரனை பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்படும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.