தயக்கமின்றி வவுனியா வைத்தியசாலையை நாடுங்கள் – வைத்தியசாலை பணிப்பாளர்

IMG 2690 1 1
IMG 2690 1 1

வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த நோயாளர்கள் தமது சிகிச்சைகளை பெறுவதற்கு எவ்வித தயக்கமுமின்றி வவுனியா பொது வைத்தியசாலையை நாடமுடியுமென வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.

வவுனியா பொது வைத்தியசாலைக்கு செல்வதனால் அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக வெளிநோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெறக்கூடியவர்கள் கூட வைத்தியசாலைக்கு செல்ல பின்னடிப்பதாக கிடைத்த தகவல் தொடர்பாக வினவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய கொரோனா கடுந்தொற்றிலிருந்து மக்களையும் நோயாளரையும் பாதுகாப்பதற்கு, தொற்றை முற்கூட்டி அடையாளப்படுத்துதலும் விரைவான உடனடி சிகிச்சையை உறுதிப்படுத்துதலும் அத்தியாவசியமானதாகும். 
கடும்சுவாச சிக்கலுடன், நாட்பட்ட நிலையில் சிகிச்சைபெற வைத்தியசாலைக்கு வரும் கொரோனா நோயாளர்களுக்கே சிகிச்சை பலனின்றிபோகும் சாத்தியம் அதிகம் என்பதுடன் மரணத்தையும் ஏற்படுத்தவல்லது என்பது விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தப்படுள்ளது.

கொரோனா தொற்றுநிலை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு மற்றும் பொருளாதார முடக்கநிலை காரணமாக, ஏலவே கடும் சமுக பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டுள்ள வவுனியா பிராந்திய மக்கள், வைத்திய சேவைக்காக எந் நிலையிலும் மாவட்ட பொதுவைத்தியசாலையை நாடலாம் என தெரிவித்த அவர், வைத்தியசாலையானது மக்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு மேலாக சமுக அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் ஆதாரமாக செயற்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்தார்.

வெளிநோயாளர் பிரிவில் சாதாரணமாக சிகிச்சை பெறக்கூடிய நிலை காணப்படுகின்றது. எனவே, கொரோனா நோயாளர்களோ அல்லது கொரோனா அல்லாத பிற நோயாளர்களோ மருத்துவ ஆலோசனை தேவைப்படுவதாக உணருமிடத்து, தயக்கமின்றியும், தாமதமின்றியும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையை உடனடியாக நாடுமாறும் அறிவுறுத்தினார்.