சுபோதினி திட்டத்தை அங்கீகரித்து சுற்றறிக்கை வரும்வரை போராட்டம் தொடரும் – ஜீ.ருபேசன

DSC 1687
DSC 1687

ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் சுபோதினி திட்டத்தை அமைச்சரவையில் அங்கீகரித்து அதனை சுற்றறிக்கை மூலம் அறியத்தர வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடர்ந்து செல்லும் என வடக்கு கிழக்கு மாகாண இலங்கை அரசாங்க ஆசிரியர்களின்  சங்கத்தின் செயலாளர் ஜீ.ருபேசன் தெரிவித்தார். 

மட்டக்களப்பில் அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிரியர் சங்க போராட்டம் 60 நாட்களை கடந்து அதிபர் ஆசிரியர் சங்க போராட்டம் நீண்டு கொண்டிருக்கின்ற இந்த சமயத்தில் அரசாங்கமும் அரசாங்கத்திற்கு ஆதரவாளர்களும் சமுதாயத்திற்கு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் ஆசிரியர்களின் இந்தப் போராட்டமானது இருபத்தி நான்கு வருட காலமாக மாறி மாறி வந்த அரசுகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சரியான சம்பளத்திலிருந்து ஒரு தொகையினை சூறையாடியே வந்திருக்கின்றது. 

இந்த தரவேண்டிய சம்பளத்தை எங்களுக்குத் தாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கின்றோம் மாறாக இது சம்பள உயர்வுக்கான போராட்டம் அல்ல. இவ்வாறு நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற பொழுது ஆரம்ப காலகட்டங்களில் அரசினால் கல்வித் திணைக்களத்தின் மேலதிக செயலாளரான சுபோதினி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவால் ஒரு சம்பளம் முரண்பாட்டுத் தீர்வு முன்வைக்கப்பட்டது.

இது அரசினால் அமைக்கப்பட்ட குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையே. இதையே நாமும் தீர்வாக கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசாங்கமும் அரசாங்கத்திற்கு சார்பானவர்களும் ‘நாம் ஆசிரியர்களுக்கு சரியான தீர்வினை பெற்றுக் கொடுத்து விட்டோம்’ என போலியான செய்திகளை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
இருபத்தி நான்கு வருட காலமாக ஏமாற்றப்பட்ட இந்த ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் எங்களுக்கு சுபோதினி திட்டத்தை அமைச்சரவையில் அங்கீகரித்து அதனை சுற்றறிக்கை மூலம் அறியத்தர வேண்டும். இதுவே எமது கோரிக்கை. இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை நாம் எமது போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை. 

இந்த அரசாங்கமானது இந்த போராட்டத்தை நிறுத்துவதற்கு பல வழிகளிலும், பல வகைகளிலும் முயற்சி செய்துவருகின்றது. இதற்கு உடந்தையாக சில அரசு சார்பானவர்கள் மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் பல இன்னலான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்தாலும் ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை என்றும் நிறுத்தப் போவதில்லை. 

வடக்கு கிழக்கில் ஆசிரியர்கள் கற்பிக்கின்றார், சேவையில் ஈடுபடுகின்றார்கள் என இந்த அரசாங்கம் கூறுகின்றது. எனவே இந்த அரசாங்கத்திற்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் நான் இந்த ஊடக சந்திப்பை கிழக்கு மண்ணில் இருந்தே வழங்கிக் கொண்டிருக்கின்றேன். அரசாங்கத்தின் பாரிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் எங்களுடைய கிழக்கு ஆசிரியர்களும் போராட்டத்தில் பூரண  பங்களிப்புச் செய்கின்றார்கள்.

எனவே அரசின் இத்தகைய கூற்றானது இன முரண்பாடுகளை தோற்றுவித்து அதன் மூலமாக ஆசிரியர் போராட்டத்தை சிதைக்க முடியும் என்கின்ற உள்நோக்கத்தின் வெளிப்பாடாகும். நாங்கள் அனைவரும் வடக்கு கிழக்கு என்று அல்லாது நாடு பூராகவும் இருக்கின்ற ஆசிரியர்கள் அனைவரும் ஒற்றுமையாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து கொண்டிருக்கின்றோம்.

ஆசிரியர்கள் மாணவர் நலனில் அக்கறை அல்லாதவர்கள் என கூறிகொண்டிருகிறார்கள். எவருக்கு கல்வியில் அக்கறை இல்லை? உண்மையில் இந்த நிகழ்நிலை கல்வியை ஆரம்பத்தில் ஆசிரியர்கள் நாமாகவே முன்வந்து வழங்கினோம். ஆனால் இன்று இந்த நிகழ்நிலை கல்வியை நிறுத்தக் காரணம் அரசே. 
இந்த அரசாங்கமானது இந்த நிகழ்நிலை கல்வியை கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு ரூபா 5000 வீதம் இரண்டு மாதம் நிவாரண கொடுப்பனவு வழங்குகின்றார்கள். இந்த கொடுப்பனவை எதிர்பார்த்து நாங்கள் நிகழ்நிலை கல்வியை நிகழ்த்தவில்லை. எமக்கு இந்த கொடுப்பனவு தேவையில்லை. எங்களுக்குத் தேவை சம்பள முரண்பாட்டிற்கான தீர்வு மாத்திரமே.

எனவே  இந்த பணத்தினை நிகழ்நிலை கல்வியைப் பெற முடியாமல் இருக்கின்ற மாணவர்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அத்தோடு இலங்கை வரலாற்றிலேயே கல்வி பாரிய இடர்பாடுகளை சந்தித்து இருக்கின்றது அப்பொழுதெல்லாம் சரியான திட்டங்களை முன்வைத்து மாணவர்களுக்கு சரியான கல்வியினை  வழங்க நாம் பழகி இருக்கின்றோம். 

அதேபோன்று இன்றும் நாம் சரியான திட்டங்களை வகுத்து இன்றைய காலகட்டத்தில் விடுபடுகின்ற நாட்களுக்கு சமமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவோம். இது எங்களுடைய கடைமை ஆனால் அரசு கூறுகிறது ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வியை பாழாக்குகின்றார்கள் என யார் பாழாக்குகின்றார்கள்? அரசே எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாது இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு தீர்வு தந்த மறுகணமே நாங்கள் சேவைக்கு திரும்புவோம்.

எனவே அரசு மேலும் மேலும் இழுத்தடிக்காமல் எங்களுக்கு தீர்வினைப் பெற்றுத் தந்து மாணவர்களுக்கு உடனடியாக அவர்களுடைய கல்வியை தொடர்வதற்கு வழி அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேவேளை நிகழ்நிலை கல்வியைத் தொடர முடியாமல் இருக்கின்ற மாணவர்களுக்குரிய பூரண வசதியையும் அரசு செய்து கொடுக்கவேண்டும். என தெரிவித்தார்.