தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் – சித்தார்த்தன்

siththarthan
siththarthan

தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் அதனை தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல விடயங்கள் தமிழ் மக்களுக்கு விரோதமாகவே இருக்கின்றன. இன்றைய சூழலில் நடக்கின்ற பல சம்பவங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகவும் இருக்கின்றன.

இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்குமென்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்ட விடயமாக இருக்கலாம். ஆனால் அத்தனைய சம்பவங்கள் இடம்பெறுவதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதே போல கடந்த ஆட்சிகளிலும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

ஆகவே இன்றைய ஆட்சியாளர்களும் அதே நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் தமிழர்களுக்கு விரோதமாக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக நாங்கள் எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

குறிப்பாக தேசிய கீதத்தை தமிழில் பாடமாட்டோம் என்பது, தமிழர் உரிமை சார்ந்து கதைக்கின்ற தரப்பினர்களை விசாரணைக்கு அழைப்பது, தமிழர் உரிமை சார்ந்த விடயங்களை மறுப்பது, உள்ளிட்ட பல விடயங்கள் இன்றைக்கு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றது.

ஆகையினால் அரசின் இத்தகைய செயற்பாடுகளை மறுப்பதுடன் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

ஆகவே தமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்த விடயங்களிலாவது தமிழர் தரப்பிலுள்ள அனைவரும் ஒருமித்துச் செயற்பட வேண்டியது மிக மிக அவசயிமாக இருப்பதாகவே கருதுகின்றேன்.