வெடுக்குநாறி மலைப்பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம்:ஆதி இலிங்கேஸ்வரரை அழிக்க திட்டம் என மக்கள் தெரிவிப்பு !

wedukunari
wedukunari

வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயப்பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக தெரிவித்த பிரதேச மக்கள் அங்குள்ள சில விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். 

இவ் விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் அப்பகுதி மக்கள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்து வரும் நிலையில் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது. 

இந் நிலையில் ஊர் மக்கள் ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லாத நிலையில் தொல்லியல் திணைக்களம் அங்குள்ள பல விக்கிரகங்களை அழித்துள்ளதாக நாம் சந்தேகிக்கின்றோம். அத்துடன் பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளது. 

இச் சூழலில் தற்போது ஆலயத்தை நோக்கி உழவியந்திரங்களில் பெளத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பொருட்கள் இராணுவத்தினரால் எடுத்துச்செல்லப்படுகின்றது. 

எமது ஆலயத்தை பெளத்த மயமாக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாம் எண்ணுகின்றோம். 
இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.