வவுனியா தாண்டிக்குளத்தில் இரண்டாவது தடுப்பூசி!

COVID CORONA VACCINE 768x384 1
COVID CORONA VACCINE 768x384 1

வவுனியா இடம்பெற்ற இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவு சிறப்பான ஒரு திட்டமிட்ட செயற்பாட்டின் மூலமாக மாவட்டத்திற்கே முன்மாதிரியாக விளங்கியுள்ளது.

வவுனியாவில் அண்மைக்காலமாக 6800க்கு மேற்பட்ட கொரோனா தொற்றாளர்களையும், 150 க்கும் மேற்பட்ட கொவிட் மரணங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான சூழ்நிலையில் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  7ம் திகதி முதல் சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தடுப்பூசியினை பெறுவதற்காக ஒவ்வொரு மத்திய நிலையங்களிலும் அதிகளவான மக்கள் கூடும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி, பூவரசங்குளம் வைத்தியசாலை போன்ற பல்வேறு இடங்களில் அதிகளவான மக்கள் கூட்டம் காணப்பட்டமையால் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் நிலைமை ஏற்பட வாய்ப்பாவதற்கான சந்தர்ப்பமாக மாறும் நிலையேற்பட்டது.

இதனை கவனத்தில் கொண்டு வவுனியா தாண்டிக்குளம் கிராம சேவையாளர் ரவீந்திரனின் முயற்சியினால் நகர சபை உறுப்பினரும் வர்சா தொண்டு நிறுவனத்தின் செயலாளருமான சு.காண்டிபன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், இளைஞர்கள் இணைந்து இன்றைய தினம் மிகச்சிறப்பான ஒழுங்கமைப்பினை தாண்டிக்குளம் பிறமன்டு வித்தியாலயத்தில் ஏற்படுத்தியிருந்தனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டதுடன், சமூக இடைவெளிகளை சிறப்பான முறையில் பின்பற்றி தங்களிற்கான தடுப்பூசிகளை பெற்றுச்சென்றிருந்தனர். 30 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கான இத்தடுப்பூசி செலுத்தும் பணிகள் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை இடம்பெற்றதுடன் இச்செயற்பாட்டின் மூலம் 510 பேர் தமக்கான தடுப்பூசியினை பெற்றுச்சென்றிருந்தனர்.

இதேவேளை இச்செயற்பாட்டிற்கான நிதியினை வர்சா தொண்டு நிறுவனம் வழங்கியிருந்ததுடன், இக்கிராம சேவகர் பிரிவினரின் சிறப்பான ஒழுங்கமைப்பினை ஏனையவர்களும் பின்பற்றும் பட்சத்தில் தொற்றற்ற மாவட்டத்தை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.