கெசல்வத்த தினுகவுடன் தொடர்பை கொண்டிருந்த காவல்துறை அதிகாரி சிக்கினார்

arrest 2
arrest 2

உயிரிழந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக்குழு உறுப்பினருமான கெசல்வத்த தினுக எனப்படும் ராஜபக்ஷ ஆராச்சிலாகே தினுக மதுஷானுடன் நெருங்கிய தொடர்பை பேணிய குற்றச்சாட்டில் பமுனுகம காவல்துறையின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியை காவற்துறையினர் தனது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அத்துடன் அவர் உடனடியாக அமுலாகும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள கெசல்வத்த தினுகவின் வீடு நேற்றைய தினம் கொட்டாஞ்சேனை காவல்துறையினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது, குறித்த காவல்துறை பரிசோதகர் அந்த வீட்டில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, விசாரணைகளுக்காக அவரை காவல்துறையினர்  தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அவர் வாழைத்தோட்ட காவல்நிலையத்தில் சேவையாற்றிய காலப்பகுதியில் கெசல்வத்த தினுகவுடன் நெருங்கிய தொடர்பை பேணியதாகவும், அவரது போதைப்பொருள் விநியோகத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்துள்ளதாகவும் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த காவல்துறை பரிசோதகர், பல சந்தர்ப்பங்களில் கெசல்வத்த தினுக்கவின் போதைப் பொருள் விநியோகத்தை பரிசோதனை இன்றி கொண்டு செல்வதற்கு இடமளித்துள்ளதாகவும் அந்த விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியிருந்த கெசல்வத்த தினுக, துபாயில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு மரபணு பரிசோதனையின் மூலம் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.