இலங்கை அரசின் இரட்டை நிலைப்பாடே தற்போதிருக்கும் பிரச்சினை – எம்.ஏ.சுமந்திரன்

MA Sumanthiran 720x450 1
MA Sumanthiran 720x450 1

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதே தற்போதிருக்கும் பிரச்சினை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நாடாளுமன்றில் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரை சந்தித்த ஜனாதிபதி நாட்டின் பொறுப்புக்கூறல் தொடர்பாக வினைத்திறனாக செயற்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனை உடனடியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றது.

ஆனால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அந்த கூற்றுக்கு முற்றிலும் மாறுபட்டவகையில், எந்தவிதமான வெளிவாரி பொறிமுறைகளையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

அதேபோன்றுதான் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

ஆனால் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கடந்த யூலை மாதம் நடத்தவிருந்த சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதுடன், பின்னர் அந்த சந்திப்பை நடத்த திகதி ஒதுக்குவதாக கூறி 2 மாதங்கள் கடந்துவிட்டன.

இன்னும் அதற்கான திகதி ஒதுக்கப்படவில்லை.

அரசாங்கம் புலம்பெயர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக, தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று எம்.ஏ.சுமந்திரன் கோரினார்.

இதனை அடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் தொடர்புடைய சம்பவம் குறித்த விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

தெளிவாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவ்வாறான விசாரணைகளை நடத்துவது அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.