நாடாளுமன்ற உறுப்பினரை நாயை பிடிப்பது போல பிடித்து ஏற்றியுள்ளனர் – சுகாஷ்

VideoCapture 20210923 154749 1
VideoCapture 20210923 154749 1

நாடாளுமன்ற உறுப்பினரை நாயை பிடித்து இழுத்து விடுவது போல ஏற்றி வந்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலை அமைதியான முறையில் தீபமேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்டதாக கூறி,எந்தவிதமான நீதிமன்ற கட்டளையை மீறாத எமது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்களையும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரஜீவையும் ஆதரவாளர் ஒருவரையும் காவல்துறையினர் மிருகத்தனமாக தாக்கியதுடன், அந்த இடத்தில் பிரசன்னமாகி இருந்த கட்சியினுடைய பெண் உறுப்பினர்களை மிலேச்சத்தனமாக தாக்கி முன்று பேரை கைது செய்திருப்பதுடன், அந்த இடத்தில் இருந்த ஒருவரின் கைத்தொலைபேசியை அடாத்தாக கைப்பற்றியதுடன் நாடாளுமன்ற உறுப்பினரை நாயை பிடித்து இழுத்து விடுவது போல ஏற்றி வந்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தற்போது வாக்கு மூலம் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் யாழ்ப்பாணத்திலே காவல்துறையினர் அராஜகத்தை கையில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது. தற்சமயம் நாடாளுமன்ற உறுப்பினரும் ஏனைய இரண்டும் உறுப்பினரிடம் இருந்து வாக்குமூலங்களை காவல்துறையினர் பெற்றிருக்கின்றார்கள்.

எங்களுடைய கோரிக்கை இந்த கைது சட்டவிரோதமானது. நீதிமன்ற கட்டளை எதுவுமின்றி இந்த கைது இடம்பெற்றுள்ளது. அதுமாத்திரமன்றி தற்சமயம் இவ்விடயம் தொடர்பாக நீதிவான் நீதிமன்றம் ஒரு கட்டளை பிறப்பித்து இருப்பதாகவும் அந்த கட்டளை கூட நாளைய தினத்தில் இருந்து தான் அமுல்படுத்தப்படுவதாக அறிய முடிகின்றது. நாளையிலிருந்து அமலாக கூடிய ஒரு கட்டளையை வைத்து எவ்வாறு இன்றைய தினம் ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்ய முடியும் என்ற ஒரு சட்டரீதியான கேள்வி எழுகிறது. ஆனால் நாங்கள் ஆசியாவின் அதிசயம் கனவுகளின் யாழில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆசியாவின் அதிசயத்தில் இவ்வாறான விடயங்களை நாங்கள் பார்க்க வேண்டி இருக்கின்றது. நாம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது தமிழ் தேசியத்தின் இரண்டாவது சக்தியாக தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற சக்தியாகிய எமக்கு, மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. மக்களை பாதுகாக்க வேண்டிய எங்கள் உறுப்பினர்களை கைது செய்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இன்றும் நாளையும் நாங்கள் நுணுக்கமாக அவதானித்து நாங்கள் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.