ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி, பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் சுமந்திரன் : மார்ச்சலி ஐ.நா.அறிக்கை, நில அபகரிப்பு குறித்து கரிசனை

MA Sumanthiran 720x450 1
MA Sumanthiran 720x450 1

ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோருடன் தனித்தனியான சந்திப்புக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேற்கொண்டுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களின்போது வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு மற்றும் மார்ச் மாதத்தில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்ளீர்க்கப்படுவதற்கு வேண்டிய விடயங்கள் ஆகியன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.வதிவிடப்பிரதிநிதியுடான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கருடன் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுள்ள சந்திப்பின்போது வடக்கு, கிழக்கில் நடைபெற்று வருகின்ற நில அபகரிப்புக்கள் தொடர்பான விடயத்தில் கரிசனை செலுத்தப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன், நில அபகரிப்பு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தரவுகள் அடங்கிய விடயங்களை அவருடன் பகிர்ந்து கொள்வது பற்றி கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடரின்போது உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, சம்பந்தன் ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிய கடிதத்தில் குறித்துரைக்கப்பட்ட விடயங்கள் அவருடைய வாய்மூல அறிக்கையில் வெளியிடப்பட்டமை தொடர்பில் சுட்டிக்காட்டியதாகவும் அந்த அறிக்கைக்கான பங்களிப்புக்களை மேற்கொண்ட வதிவிடப்பிரதிநிதிக்கு நன்றிகளைத் தெரிவித்ததாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

பிரித்தானியானியாவுக்குச் சென்றிருந்த இலங்கைக்கான பிரித்தனிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் நாடு திரும்பியிருந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அவருடன் சுமந்திரன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பின்போது ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வாய்மூல அறிக்கை தொடர்பில் குறிப்பிட்ட விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டதோடு ரூபவ் இலங்கை குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கும் நாடுகளுக்கு தலைமை வகிக்கும் பிரித்தானியாவின் பங்களிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது என்று சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாத கூட்டத்தொடர் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

அதில் அறிக்கையொன்று வெளியிப்படும்போது அதில் உள்ளீர்க்கும் விடயங்கள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. அதற்கு பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் கூட்டமைப்பு பங்களிக்க வேண்டிய விடயங்கள் பற்றியும் கரிசனை கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அத்தோடு, ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புலம்பெயர் தமிழர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதை வரவேற்கின்ற விடயமாக பார்த்தாலும் இனப்பிரச்சினை தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விடயங்களில் இதுவரையில் எம்முடன் எவ்விதமான பேச்சுக்களையும் நடத்தாமலிருக்கின்றார் என்பதை உயர்ஸ்தானிகரிடத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம் என்று சுமந்திரன் தெரிவித்தார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நில அபகரிப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

அச்சமயத்தில் அம்பாறை உட்பட தமிழர் பகுதிகளில் இடம்பெறும் அனைத்து நில அபகரிப்பு பற்றிய தகவல்களையும் உயர்ஸ்தானிகர் கவனத்தில் கொள்வதாக தெரிவித்ததோடு ரூபவ் அம்பாறைக்கு தான் விரைவில் விஜயம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.