நெல்லின் விலையை தீர்மானிக்க அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகாரம் இல்லை!

Mahindananda Aluthgamage 02
Mahindananda Aluthgamage 02

நெல்லின் விலையை தீர்மானிப்பதற்கு, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகாரம் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் தீர்மானித்திருந்த போதிலும், அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எவ்வாறிருப்பினும், நேற்று ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய வர்த்தகர் டட்லி சிறிசேன, அரிசி ஆலை உரிமையாளர்கள், எதிர்காலத்தில் அரிசி மற்றும் நெல் விற்பனை செய்வதற்கான புதிய விலைகளை அறிவித்தார்.

ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 62 ரூபா 50 சதத்திற்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல்லை 70 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லை 80 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக டட்லி சிறிசேன தெரிவித்தார்.

அதேநேரம், சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு அரிசியை 115 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 140 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 165 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஊடக சந்திப்பில், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, நாட்டின் அரிசி விலையை தீர்மானித்தார்.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லின் விலையை தீர்மானிக்க முடியாது. டட்லி சிறிசேனவுக்கு அதனை தீர்மானிக்க முடியாது. அரசாங்கமே அதனைத் தீர்மானிக்கும்.

விவசாயிகளுக்கு உத்தரவாத விலையை வழங்குவது தொடர்பில் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அமைச்சர் இவ்வாறு கூறினாலும், வர்த்தகர் டட்லி சிறிசேன நேற்று அறிவித்த விலைகளுக்கு அமையவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக சில வர்த்தகர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தையில் தற்போது தேவைக்கு மேலதிகமாக அரிசி உள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரிசி வகைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக போதுமான அளவு அரிசி சந்தைக்கு கிடைக்க பெறுவதாக மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.