நாட்டை பிளவுபடுத்தாதீர்கள் – ஜனாதிபதிக்கு சங்கரி கடிதம்

aanantha sangari
aanantha sangari

தேசிய கீதம் ஒவ்வொருவரும் தமது தாய்நாட்டைப் புகழ்ந்து பாடும் பாடலாகும். குளவிக் கூட்டிற்கு எவரையேனும் கல்லெறிய அனுமதிக்க வேண்டாம். இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி ஜனாபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

“தாங்கள் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன்பின் தங்களுக்கு நான் எழுதும் இரண்டாவது கடிதமாகும். பிரச்சினைகளுக்குரிய விடயங்களில் நான் எவ்வாறு செயற்பட்டு வந்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். விளைவுகளைப்பற்றி சிந்திக்காத சிலர் திடடமிட்டு குழப்பி பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள்.

தேசிய கீதம் ஒவ்வொருவரும் தமது தாய்நாட்டைப் புகழ்ந்து பாடும் பாடலாகும். எவரையேனும் குளவிக் கூட்டிற்கு கல்லெறிய அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றேன். மனசாட்சி உள்ள எவரேனும் இந்த விடயத்தில் தலையிட மாட்டார்கள்.

ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழியில் தமது தாய்நாட்டை புகழ்ந்து பாடுவதையே விரும்புவார்கள். அது ஒரு மனிதனின் அடிப்படை உரிமையுமாகும். குறிப்பிட்ட ஒரு மொழியில் பாடவேண்டும் என வற்புறுத்துவது, எதிர் காலத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும்.

தமிழ் பேசும் மாணவர்கள் தமக்கு தெரிந்த மொழியில் மனப்பாடம் செய்து வைத்துள்ளார்கள்.

தங்களை சங்கடப்படுத்துவதற்காக இதனை எழுதவில்லை, ஒரு முதிய அரசியல்வாதியின் நல்லாலோசனையாக ஏற்றுக் கொள்ளளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”, என்றுள்ளது.