பால்மா இறக்குமதியாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

download 2 1
download 2 1

இன்றைய தினத்திற்குள் தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகப் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.  இதற்கமைய கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகையை விடுவிக்கக் கூடியதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  நேற்றைய தினம் குறித்த வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அந்தச் செயற்பாடு இடம்பெற்றிருக்கவில்லை. 

இந்நிலையில் இன்றைய தினத்திற்குள் தங்களது தரப்பினர் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வங்கிகளுக்கு டொலர் ஒதுக்கம் கிடைக்கப்பெறுமாயின் எதிர்வரும் இரண்டு தினங்களில் கொழும்பு துறைமுகத்திலிருந்து பால்மா தொகையை விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  

டொலர் பற்றாக்குறை காரணமாகக் கொழும்பு துறைமுகத்தில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் தேங்கியுள்ளதோடு, அவற்றை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருந்தார்.  இதன்படி, மத்திய வங்கியின் ஆளுநரால் இரண்டு அரச வங்கிகளுக்கு அண்மையில் டொலர் ஒதுக்கத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  எனினும் தனியார் வங்கிகளுக்கும் இந்த நடவடிக்கை விஸ்தரிக்கப்பட வேண்டும் என இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.