இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் நாளை போராட்டம்!

fisher
fisher

இந்திய மீனவர்களது எல்லை தாண்டிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்பாக நாளை முற்றுகைப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களினால் பாதிப்புக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய – இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத நிலையில் நாளை வெள்ளிக்கிழமை யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் முன்பாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் துணைத்தலைவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் எவரும் பேசவில்லை.

எமது பிரச்சினைகளை பேசுவதற்கு எவரும் இல்லை. இந்நிலையிலே நாம் இந்தியத் துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

கடந்த வாரம் கூட எமது கடல் எல்லையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களின் படகை வேண்டுமென்றே நேர் எதிராகவே மோதியதுடன், எமது மீனவர்களை மூழ்கடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

எமது மீனவர்கள் அத்தகைய சூழலிலும் காயங்களுக்குள்ளாகி தமது உயிரை காப்பாற்றி மீண்டு வந்துள்ளார்கள். இது இன்று நேற்றல்ல. தொடர்ச்சியாகவே இடம் பெற்று வருகின்றது. 

இந்திய மீனவர்களின் அத்துமீறல் என்பது எமது கடல் வளத்தை அழிப்பது மட்டுமன்றி எமது தொழில்களையும் இல்லாது செய்துள்ளார்கள். இவர்களின் அத்துமீறல்களினால் கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி கடலை நம்பி வாழ்கின்ற அத்தனை மக்களது வாழ்வாதாரம் பொருளாதாரத்தை அழிக்கும் செயல்களில் தான் இவர்கள் ஈடுபடுகின்றார்கள்.

இவர்களது அடாவடித்தனங்கள் தொடர்பில் பல தடவைகள் இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு மட்டுமன்றி கடற்றொழிலாளர்களுக்கு மத்தியிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதும் எத்தகைய நன்மையும் கிடைக்கவில்லை.

மாறி மாறி வரும் அரசாங்கங்களும் எமது பிரச்சினைகளை கண்டும் காணாது மாதிரியே செயற்படுகின்றார்கள்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களினால் எமது மீனவர்கள் பல கோடி சொத்தக்களை இழந்துள்ளார்கள். இந்த நிலை தொடருமானால் பட்டினிச் சாவைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும்.

இந்திய மீனவர்களின் சட்டவிரோத தொழில் முறைகளினால் தொடர்ந்தும் பாதிப்புக்களையே சந்தித்துவரும் நிலையிலேயே இத்தகைய போராட்டங்களை முன்னொடுக்கவுள்ளோம். எமக்கு சரியான தீர்வு கிடைக்காது விடின் தொடர் போராட்டத்தையே முன்னெடுப்போம் என்றார்.