தமிழ் அரசியல் கைதியொருவர் 12 வருடங்களின் பின் விடுதலை

201912071833418874 24 released including law college student near Mettupalayam SECVPF
201912071833418874 24 released including law college student near Mettupalayam SECVPF

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிருபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 அம்பாறை அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன்,வயது 29 என்பவரே மேற்படி விடுதலை செய்யப்பட்டவராவார்.

 கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்  பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று (10.10.2021)மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப்  பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் அவர்கள் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன் வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம்,  குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக் கூறி அவரை நிருபராதி என விடுதலை செய்துள்ளது.